

வங்கதேசம் - ஷேக் ஹசீனா
Bangladesh Former Prime Minister Sheikh Hasina Verdict : இந்தியாவின் அண்டை நாடு வங்கதேசம், மிக நெருங்கிய நட்பு நாடாகவும் திகழ்ந்து வந்த வங்கதேசம், சில ஆண்டுகளாக சீனாவை நெருங்கி வருகிறது. அங்கு பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது.
அரசுக்கு எதிராக பொராட்டம், வன்முறை
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசுக்கு எதிராக நடந்த போராட்டம் பெரும் வன்முறைக்கு வித்திட்டது. நாடு முழுவதும் நடைபெற்ற கிளர்ச்சியில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
மாணவர்கள் முன்னின்று நடத்திய போராட்டங்களால், ஷேக் ஹசீனா பதவியை இழந்து, உயிர்தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். கடந்த ஓராண்டாக இந்தியாவில் அவர் வசித்து வருகிறார்.
வங்கதேசத்தில் இடைக்கால அரசு
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பு சார்பில், நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாணவர்கள் பலர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
ஹசீனா மீது பாய்ந்த வழக்குகள்
புதிய அரசு அமைந்த உடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை(Sheikh Hasina Case Verdict in Tamil), ஊழல் செய்தது உட்பட வழக்குகள் பதியப்பட்டன. சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து, வங்கதேச சர்வதேச குற்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
மனித குலத்திற்கு எதிரானவர் ஹசீனா
கலவரம் தொடர்பான வழக்கை அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. மனித குலத்திற்கு எதிராக ஷேக் ஹசீனா குற்றம் செய்துள்ளார் என அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இதனால் இந்த வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து சர்வதேச குற்ற தீர்ப்பாயம் நீதிபதி கூறியதாவது :
ஷேக் ஹசீனா ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளது.
அதிகாரத்தில் நீடிக்க ஷேக் ஹசீனா அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளார்.
போராட்டக்காரர்களை கொல்ல கொடிய ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவிட்டு இருக்கிறார்.
போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது.
போராட்டக்காரர்களுக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டு உள்ளது.
கடந்தாண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டங்களில் 1,400 பேர் கொல்லப்பட்டனர். 24 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஷேக் ஹசீனா போராட்டக்காரர்களை தூண்டிவிட்டார். அவர்களை அவர் களங்கப்படுத்தினார்.
இத்தகைய பாதக செயல்களை செய்த ஷேக் ஹசீனா குற்றவாளி தான் என்று நீதிபதி தீர்ப்பு.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை
இதையடுத்து, ஷேக் ஹசீனாவுக்கு எதிரான தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி, அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார். ஹசீனா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த Asaduzzaman Khan Kamal-க்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. காவல்துறை முன்னாள் தலைமை அதிகாரி Chowdhury Abdullah Al-Mamunக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசம் - கண்டவுடன் சுட உத்தரவு
வங்கதேசம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பந்த் நடத்த ஷேக் ஹசீனாவின் ஹவாமி லீக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க தலைநகர் டாக்காவில், வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
===============