

வெனிசுலா மீது அமெரிக்கா போர்
"PM Modi Knew I Wasn't Happy": Trump's Latest Warning Over Russian Oil : சர்ச்சை நாயகனாக திகழ்ந்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரொவை சிறைப்பிடித்து இருக்கிறார். நியூயார்க் நகரில் மதுரொ சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில், உலகம் முழுவதும் இருந்து அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இந்தியா, ரஷ்யா குறித்து கருத்து
இந்தநிலையில், புளோரிடாவில் இருந்து தலைநகர் வாஷிங்டன் செல்லும் வழியில் விமானத்தில் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் அவருடன் இருந்தார்.
செய்தியாளர் சந்திப்புக்கு இடையே பேசிய லிண்ட்சே கிரஹாம், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கணிசமாகக் குறைத்து விட்டதாகவும், அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது விதித்த கூடுதல் வரிதான் இதற்குக் காரணம் என்றும் சுட்டிக் காட்டினார்.
நான் மகிழ்ச்சியாக இல்லை
இதைத் தொடர்ந்து பேசிய டொனால்டு ட்ரம்ப், ‘‘அமெரிக்கா விதித்துள்ள தடைகள், ரஷ்யாவை கடுமையாக பாதித்து வருகின்றன. அடிப்படையில் அவர்கள் (இந்தியா) என்னை மகிழ்ச்சிப்படுத்த விரும்பினார்கள். மோடி ஒரு நல்ல மனிதர். (ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால்) நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும்.
நான் வரிகளை உயர்த்தினால்...
என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம். அவர்கள் வர்த்தகம் செய்கிறார்கள். நாங்கள் அவர்கள் மீது மிக விரைவாக வரிகளை உயர்த்த முடியும். அப்போது அது அவர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கும்’’ என தெரிவித்தார்.
அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், ‘‘ஒரு மாதத்துக்கு முன்பு நான் அமெரிக்காவுக்கான இந்திய தூதரின் வீட்டில் இருந்தேன்.
ரஷ்யாவிடம் இருந்து எவ்வளவு குறைவாக கச்சா எண்ணெயை இந்தியா வாங்குகிறது என்பது குறித்து அவர்கள் பேச விரும்பினார்கள். இந்தியாவுக்கு எதிரான வரியை குறைக்குமாறு அதிபரிடம் சொல்வீர்களா என்றும் கேட்டனர்.
ரஷ்யாவுக்கு நெருக்கடி அவசியம்
ஆனால், ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வாடிக்கையாளர்கள் மீது அழுத்தம் கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 500% வரி விதிக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
ஏற்கனவே 50 சதவீத வரி
ஏற்கனவே இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து இருக்கிறது. இதன் காரணமாக, அமெரிக்காவில் இந்திய பொருட்கள் விற்பனை கணிசமாக குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
====================