

இலங்கை நிலையில், ஈரான்
Iran Protests Again Govt Reason in Tamil : 2022ம் ஆண்டு இலங்கையில் பொருளாதர சீர்குலைவு மக்கள் போராட்டத்திற்கு வழிவகுத்தது. விண்ணை முட்டிய விலைவாசி, மக்களை சாலைகளில் திரளவைத்து, அதிபர் மாளிகையை சூறையாடச் செய்தது. உயிருக்கு பயந்த ஆட்சியாளர்கள் தப்பியோட வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டது.
கமேனி கையில் ஈரான்
அப்பேர்ப்பட்ட நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது ஈரான். மேற்கு ஆசிய நாடான ஈரானில், அமெரிக்காவின் திரைமறைவு ஆட்சிக்கு எதிராக அயோதுல்லா கமேனி குரல் கொடுக்க,1979ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஈரான் ஓர் இஸ்லாமிய குடியரசு ஆனது. இஸ்லாமிய புரட்சிகர கவுன்சிலின் உறுப்பினரான கமேனி, 1989ல் ஈரானின் உச்ச தலைவரானார். இன்று வரை அவர் தான் ஈரானை ஆட்டிப் படைக்கிறார்.
வானளவிய அதிகாரம் கொண்ட கமேனி
அவரை சுற்றியே ஈரானின் எல்லா செயல்பாடுகளும் இன்றளவும் கட்டமைக்கப்படுகின்றன. இஸ்லாமிய சட்டப்படி நடக்கும் ஆட்சியில் கமேனிக்கு நாட்டின் அரசு, நீதித் துறை, ஊடகம் என அனைத்தின் மீதும் வானளாவிய அதிகாரம் உள்ளது.
அரசுக்கு எதிராக மக்கள்
ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக திரும்பி நிற்கிறது. ஈரானில் பொருளாதாரம் தள்ளாட்டம் காண்பதால், அரசுக்கு எதிரான மிகக் கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கமேனிக்கு எதிராக அதிருப்தி
பணவீக்கம், விலைவாசி உயர்வு, நாணய மதிப்பு சரிவு, வேலைவாய்ப்பின்மை ஆகியனவற்றுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயோதுல்லா அலி கமேனிக்கு எதிராகவும் அதிருப்தி அலைகள் வலுத்துள்ளது.
களத்தில் ஈரான் ராணுவம்
ஈரானின் 21 மாகாணங்களும் போராட்டத்தால் பற்றி எரிகின்றன. நாடெங்கும் “Death to Khamenei", “Shame on Khamenei” போன்ற முழக்கங்கள் வலுத்துள்ளன. போராட்டத்தைக் கட்டுப்படுத்த ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் குதித்த மாணவர்கள்
பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக களத்தில் இறங்கி விட்டனர். புத்தாண்டிற்கு முதல்நாள் 21 மாகாணங்களிலும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டிய நிலை வந்து விட்டது. ஜனவரி 1ம் தேதி மோதலில் போராட்டக்காரர்களில் 7 பேர் உயிரிழந்தனர்.
கிராமங்களிலும் கமேனிக்கு எதிர்ப்பலை
போராட்டம் கிராமப்புறங்களிலும் பரவியுள்ளது. பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, தண்ணீர், எரிபொருள் பற்றாக்குறை மக்கள் கொந்தளிக்க செய்து இருக்கிறது. கமேனிக்கு எதிரான கண்டனங்கள் ஈரான் அரசை ஆட்டம் காண வைத்துள்ளன.
ஈரான் மக்களுக்கு அமெரிக்கா ஆதரவு
இந்தப் போராட்டத்தை தனக்கு சாதகமாக அமெரிக்கா பயன்படுத்த துவங்கி இருக்கிறது. மக்கள் மீது தாக்குதல் நடத்தினால், விளைவு கடுமையாக இருக்கும் என ஈரான் அரசை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்து வருகிறார்.
ஈரான் ரியால் மதிப்பு சரிவு
ஈரான் பணவீக்கப் பிரச்சினையில் சிக்கியது ஏன்?. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் 12 நாட்கள் நடத்திய தாக்குதல், அந்நாட்டு பொருளாதாரத்தை கடுமையாக பதம் பார்த்து விட்டது. அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகளும் கடைபிடிப்பதால், ஈரான் நாணயமான ரியால் மீதான தாக்கத்தை கடுமையாக்கியுள்ளது.
கடந்த 2015-ல் அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாணயத்தின் மதிப்பு 32,000 ரியாலாக சரிந்தது. அது மென்மேலும் சரிந்து இப்போது 1.4 மில்லியன் என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
உச்சத்தில் அத்தியாவசிய பொருட்கள்
இதனால் பால், தானியங்கள் போன்ற உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 70% அதிகரித்தது. இதுதான் சாமானிய மக்களை வீதிகளுக்குத் தள்ளியுள்ளது. ஜென் ஜி இளைஞர்கள் ஆக்ரோஷமாக அரசுக்கும், உச்சத் தலைவர் கமேனிக்கும் எதிராக களமிறங்கியுள்ளனர்.
மக்களின் போராட்டம் கமேனி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதோடு, புரட்சிக்கும் வழி வகுக்கும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
====