”இப்போது ஹோர்முஸ், நாளை செங்கடல்” : சரக்கு கப்பல்களை குறிவைக்கும் ஈரான் : ஹவுதி படைகள் தயார், உலக நாடுகள் அதிர்ச்சி..!

ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து, செங்கடல் வழித்தடத்தையும் முடக்க ஈரான் திட்டமிட்டு இருப்பது, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Iran's plan to block  Red Sea route, following  Strait of Hormuz, shocked nations across the world
Iran's plan to block Red Sea route, following Strait of Hormuz, shocked nations across the worldAI generated
1 min read

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்

இஸ்ரேல், அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. அந்த வழியாக சரக்கு கப்பல்கள் வந்தால் தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்தது.

நட்பு நாடுகளுக்கு அனுமதி

இதனால் உலக அளவில் 20 சதவீதம் அளவிற்கு கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டது. பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடும் ஏற்பட்டது. பின்னர் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் சரக்கு கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

ஈரான் - அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு, அமைதி ஒப்பந்தம் ஏற்பட, ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டு, கச்சா எண்ணெய் சப்ளை சீரானது.

அமைதி ஒப்பந்தம் ரத்து

ஆனால், இது சில வாரங்கள் கூட நீடிக்கவில்லை. நீரிணையில் சரக்கு கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்த, அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

இதையடுத்து ஈரான் மீது 6வது நாளாக அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. தினமும் 7 மணி நேரம் என தாக்குதல் நடத்தப்படுகிறது.

பதிலடி கொடுக்கும் ஈரான்

இதற்கு பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை தகர்த்து வருகிறது ஈரான். ட்ரோன் தாக்குதல்களால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

ஈரானின் அணுமின் நிலையம் மற்றும் பிற மின்சார உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

செங்கடலை குறிவைக்கும் ஈரான்

அப்படி ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால், செங்கடல் வழித்தடத்தை மூட வேண்டும் என என ஹவுதி அமைப்பிற்கு ஈரான் உத்தரவிட்டு உள்ளது.

தயார்நிலையில் ஹவுதி படை

இதைத்தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏமனின் மலைப்பகுதிகளில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து செங்கடல் வழித்தடத்தின் மீது ஈரானின் கவனம் திரும்பி இருப்பது சர்வதேச நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

எரிசக்தி விநியோகம் - அச்சுறுத்தல்

இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு ஒரு சக்திவாய்ந்த புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி உள்ளது.

ஒருவேளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மூலம் செங்கடல் வழித்தடமும் மூடப்பட்டால், உலகளவில் கடுமையான எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும்.

கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்ல வேண்டியிருக்கும் என்பதால் சரக்குக் கட்டணமும், கச்சா எண்ணெய் விலையும் முன்பை விட கடுமையாக உயரும் என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.

செங்கடல் வழியாக 10% கச்சா எண்ணெய்

உலக எண்ணெய் விநியோகத்தில் சுமார் 10% முதல் 12% வரையிலான கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் செங்கடல் மற்றும் அதன் தெற்கு நுழைவாயிலான பாப் எல்-மண்டேப் (Bab el-Mandeb) நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது.

====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in