

Lowy Institute Asia Power Index 2026 India Third Rank US China
ஆசியாவின் முக்கிய வல்லரசாக உருவெடுத்துள்ள இந்தியா
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'லோவி இன்ஸ்டிடியூட்' (Lowy Institute) எனும் ஆராய்ச்சி நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகள் குறித்த தரவரிசைப் பட்டியலை (Asia Power Index 2026) வெளியிட்டுள்ளது.
ஆசியப் பிராந்தியத்தில் உள்ள 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அதிகாரம் மற்றும் செல்வாக்கை 131 அளவீடுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வல்லரசாக உருவெடுத்த இந்தியா
இதில், ஆசியாவின் மூன்றாவது சக்திவாய்ந்த நாடாக இந்தியா தனது இடத்தை உறுதிப்படுத்தி இருப்பதோடு, இப்பிராந்தியத்தின் முக்கிய வல்லரசாக உருவெடுத்துள்ளது.
முதல் 3 இடங்களைப் பிடித்த நாடுகள் மற்றும் புள்ளிகள் விவரம்
1. முதலிடம் - அமெரிக்கா (78.9 புள்ளிகள்)
அமெரிக்கா ஆசியக் கண்டத்தில் இல்லை என்ற போதிலும், இப்பிராந்தியத்தில் அதிக செல்வாக்கு கொண்ட நாடாக 78.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.
2. இரண்டாம் இடம் - சீனா (73.6 புள்ளிகள்)
73.6 புள்ளிகளுடன் சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது.
3. மூன்றாம் இடம் - இந்தியா (40.5 புள்ளிகள்)
40.5 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் தரவரிசை அறிமுகப்படுத்தப்பட்ட 2018-ஆம் ஆண்டிலிருந்து சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புள்ளிகள் இடைவெளி தற்போது மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் செல்வாக்கு
சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு அடுத்தபடியாக மிகவும் திறமையான பிராந்தியத் தலைவர்களில் ஒருவராகப் பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ளார் என்றும், இது இந்தியாவின் ராஜதந்திர செல்வாக்கை உறுதிப்படுத்துகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் புள்ளிகள் மாற்றம், முன்னேற்றம் கண்ட துறைகள்
இந்தியா தனது கலாச்சார செல்வாக்கில் மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பதிவு செய்து 2.3 புள்ளிகள் அதிகரித்துள்ளது (மொத்தம் 43.8 புள்ளிகள்). மேலும், பாதுகாப்பு வலைப்பின்னல்களில் 2.1 புள்ளிகளும், எதிர்கால வளங்களில் 1.2 புள்ளிகளும், ராணுவத் திறனில் 0.5 புள்ளிகளும் கூடுதல் முன்னேற்றம் கண்டுள்ளது.
இதர பிரிவுகளில் இந்தியா
ராஜதந்திர செல்வாக்கில் 70.3 புள்ளிகளையும், பொருளாதாரத் திறனில் 26.4 புள்ளிகளையும் (0.7 புள்ளிகள் சரிவு) இந்தியா பெற்றுள்ளது. தாங்கும் சக்தி, பொருளாதார உறவுகள் ஆகியவற்றின் புள்ளிகளில் மாற்றமில்லை.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பெருமிதம்
இந்தியாவின் தரவரிசை முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "லோவி இன்ஸ்டிடியூட் மட்டுமல்ல, பல உலகளாவிய தரவரிசை அமைப்புகளும் பொருளாதாரம், ராணுவம், நிதித்துறைகளில் இந்தியாவுக்கு மிக உயர்ந்த இடங்களை வழங்கியுள்ளன.
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு உலகளாவிய தரவரிசையில் இந்தியா மிகக் கீழான நிலையில் இருந்தது; இன்று நாம் முதல் மூன்று அல்லது நான்கு இடங்களுக்குள் இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் வலிமையான தலைமையின் கீழ் இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
======================