

தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்
MP Ramanathan Archchuna Warns Sri Lanka Government : இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தாலும் அங்குள்ள தமிழர்கள் தொடர்ந்து, பல்வேறு இன்னல்களை அனுபவித்தே வருகிறார்கள். அவர்கள் படும் கஷ்டத்தை இலங்கை நாடாளுமன்றத்தில், தமிழ் எம்பி ராமநாதன் அர்ச்சுனா ஆவேசத்துடன் விளக்கி கூறினார்.
ஆளும் கட்சிக்கு வாக்கு கிடைக்காது
( NPP- National People's Power ) ஆளும் இலங்கை அரசை மிகக் கடுமையாக விமர்சித்த அவர் கடைசி தமிழன் இருக்கும் வரை மீண்டும் என்பிபி கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றார். யாழ்ப்பாணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ராமநாதன் அர்ச்சுனா ஆளும் அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
ஆளும் அரசின் மோசமான கொள்கைகள்
ஆளும் அரசு எப்படி அடிப்படை வாத கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறது என்பது குறித்து அவர் பேசிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. முஸ்லீம் சமூகத்தினரையும் இலங்கை அரசு ஒடுக்குவதாக கூறிய அவர், அதை எதிர்த்துத் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார்.
வாக்குறுதிகள் என்ன ஆச்சு?
மலையக மக்களுக்கு வீடு வழங்க பட்டா, நனவாகும் நூற்றாண்டு கனவு என்று பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்தீர்கள். அநுரகுமார அரசு கொடுத்த வாக்குறுதிகளை நம்பி தமிழர்கள் ஆதரவு கொடுத்தார்கள். ஆனால் இன்று நடப்பதைப் பார்த்தால் ஏற்க முடியவில்லை.
வரலாற்று தவறிழைத்த சமூகம்
எங்களுடைய சமூகம் செய்த வரலாற்றுத் தவறு இந்த என்பிபி அரசுக்கு வாக்களித்தது தான். உங்களுக்குப் போடப்பட்ட ஒவ்வொரு வாக்கையும் நினைத்தால் எனக்கு நெஞ்செல்லாம் எரிகிறது. காலம் காலமாக தமிழனையும் முஸ்லிமையும் நீங்க என்ன செய்கிறீர்கள். அடித்து துன்புறுத்துகிறீர்கள்.
உங்களிடம் இனவெறி இருக்கிறது
திருக்கோணமலையில் போய் புத்தர் விகாரத்தை வைக்கிறீர்கள். சும்மா ஒரு பேச்சுக்கு கேட்கிறேன். இங்கு நான் பிள்ளையார் சிலையை வைத்தால் என்ன செய்வீர்கள். சும்மா இருப்பீர்களா? என்னை அடித்துக் கொல்வீர்கள். உங்களிடம் இன வெறி இருக்கிறது.
ஆளும் கட்சிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது
நாங்களும் பார்க்கிறோம். பொறுத்துப் பொறுத்து பார்க்கிறோம். ஆனால் நான் ஒன்று மட்டும் சொல்கிறேன். கடைசி தமிழன் இருக்கும் வரைக்கும் வடக்கு மாகாணத்தில் ஒரு வாக்கும் உங்களுக்கு விழாது. உங்களைப் பார்த்தாலே வெட்கமாக இருக்கிறது. நான் தமிழ் பால் குடித்து வளர்ந்தவன். ஆனால் முஸ்லிம் என்னுடைய ரத்தம். நீங்கள் என்ன சொன்னாலும்.. என்ன செய்தாலும் முஸ்லீம் மக்களுக்காக நான் நிற்பேன்" என்று உரத்த குரலில் பேசி, நாடாளுமன்றத்தை கதிகலங்க வைத்தார் ராமநாதன் அர்ச்சுனா.
====