
பேரணி, போராட்டம், வன்முறை :
Nepal PM KP Sharma Oli Resign on Gen Z Protest : அண்டை நாடான நேபாளத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 26 வகையான சமூக வலை தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அரசின் இந்த உத்தரவு, Gen-Z என்று அழைக்கப்படும் இளைஞர்களை உச்சக்கட்ட கோபத்தில் ஆழ்த்த, நேற்று காலை போராட்டத்துடன் தொடங்கியது நேபாள மக்களின் அன்றாட வாழ்க்கை. முதலில் பேரணி, கடைகள் அடைப்பு, போக்குவரத்து நிறுத்தம், சாலைகளில் டயர் எரிப்பு என படிப்படியாக விரிவடைந்த போராட்டம், கிளர்ச்சியில் முடிய, நேபாளமே போர்க்களமாக காட்சி அளிக்கிறது.
துப்பாக்கிச்சூடு, இளைஞர்கள் பலி :
அரசே எதிர்பாராத வகையில் இந்த போராட்டம் தலைநகர் காத்மாண்டுவை உலுக்கி எடுக்கிறது. ஆயிரக் கணக்கின் திரண்ட போராட்டக்காரர்கள், நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல, ராணுவம் வரவழைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் நாடளுமன்றத்தை நோக்கிச் செல்ல துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயிரிழந்த நிலையில், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கிறார்கள்.
ஹெலிகாப்டரில் தப்பிய அமைச்சர்கள் :
வன்முறையை ஒடுக்க கண்டதும் சுட உத்தர விடப்பட்டும், மக்களின் கோபம் தீரவில்லை. 2வது நாளாக இன்றும் காத்மாண்டுவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அமைச்சர்கள் வீடுகளை நோக்கி சென்ற கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால், ஹெலிகாப்டர்கள் மூலம் அமைச்சர்கள் உயிர் தப்பினர். பிரதமர் இல்லம் நோக்கியும் பேரணியாக இளைஞர்கள் செல்வதால், என்ன செய்வது என்று தெரியாமல் அரசு விழிபிதுங்கி நிற்கிறது.
அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு :
கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வர நேபாள பிரதமர் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருக்கிறார். அமைதி காக்குமாறு நாட்டு மக்களுக்கு அவர் விடுத்த வேண்டுகோளுக்கு எந்தப் பயனும் இல்லை. ஊரடங்கு உத்தரவு படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
நேபாள பிரதமர் ராஜினாமா :
இதனிடையே, தான் பதவி விலக வலியுறுத்தி இளைஞர்கள் நடத்தி வரும் கிளர்ச்சி ஓயாது என்பதால், பிரதமர் சர்மா ஒலி பதவி விலகி உள்ளார். இதைத்தொடர்ந்து நேபாளத்தில் இடைக்கால அரசு பதவியேற்கும் எனத் தெரிகிறது.
இந்தியர்களுக்கு அரசு எச்சரிக்கை
நேபாளத்தில் நிலைமை மோசமடைந்து வருவதால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அந்நாட்டு அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
=====