”உயிர் தப்பினார் அதிபர் டிரம்ப்” : அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : தாக்குதல் நடத்திய ஆசிரியர், யார் அந்த தாமஸ் ஆலன்!

அமெரிக்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அதிபர் டொனால்டு டிரம்ப் அதிர்ஷ்வசமாக உயிர் தப்பினார்.
President Donald Trump miraculously survived a shooting in the United States
President Donald Trump miraculously survived a shooting in the United Statesgoogle
2 min read

அதிபர் டொனால்டு டிரம்ப்

சர்ச்சைகளுக்கு பெயர் போன, டொனால்டு டிரம்ப், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்டு, லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

ஈரான் போர் காரணமாக அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அதிபர் டிரம்ப், விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

விருந்து நிகழ்ச்சியில் டிரம்ப்

வாஷிங்டனில் அதிபர் மாளிகை பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், ஆண்டுதோறும் பிரம்மாண்ட விருந்து நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விருந்து வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் ஹில்டன் ஓட்டலில் நடைபெற்றது.

துணை அதிபரும் பங்கேற்பு

இதில் அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா, துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், செய்தியாளர்கள் உட்பட 2,600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மர்ம நபர் துப்பாக்கிச்சூடு

அப்போது மர்ம நபர் ஒருவர் அந்த வளாகத்தில் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அதிபர் டிரம்புக்கு பாதுகாப்பு அளிக்கும் ரகசிய போலீஸார் (கேட்) விரைந்து செயல்பட்டு, அரண் அமைத்து அவரை பாதுகாப்பாக வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்.

துணை அதிபர் ஜே.டி. வான்சும், அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.

பாதுகாப்பு அதிகாரி படுகாயம்

துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் காயமடைந்தார். குண்டு துளைக்காத ஜாக்கெட் அணிந்திருந்ததால் அவர் உயிர் தப்பினார். தாக்குதல் நடத்திய மர்ம நபரை பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய ஆசிரியர்

அவர் பகுதிநேர ஆசிரியர் கோல் தாமஸ் ஆலன் ( வயது 31 ) என்பது தெரியவந்தது. இது குறித்த விவரங்களை வெளியிட்ட எஃப்பிஐ போலீஸார், “ விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற வாஷிங்டன் ஹில்டன் ஓட்டலில் ஆசிரியர் கோல் தாமஸ் ஆலன் தங்கியுள்ளார். விருந்து நடைபெறும்போது அவர் திடீரென உள்ளே புகுந்து 7 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

ஆசிரியர் வீட்டில் சோதனை

அதிபர் டிரம்பிடம் இருந்து சுமார் 150 அடி தொலைவில் அவரை மடக்கிப் பிடித்தோம். அவரது பெற்றோர் வீடு மற்றும் அவரோடு தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனை நடத்தி உள்ளோம். எதற்காக தாக்குதல் நடத்தினார் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.

ஆயுதங்கள் பறிமுதல்

அவரிடம் இருந்து அதிநவீன துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, ஏராளமான கத்திகளை பறிமுதல் செய்திருக்கிறோம்” என்று கூறினர். தாக்குதலை தொடர்ந்து, வாஷிங்டனில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

என்னைக் கொல்ல முயற்சி

இந்த தாக்குதல் பற்றி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “ முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்டார். அதே பாணியில் என்னையும் கொல்ல முயற்சி நடக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பென்சில்வேனியா பகுதி பிரச்சாரக் கூட்டத்தில் என்னைக் கொல்ல முயற்சி நடந்தபோது, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்.

தற்போது மீண்டும் ஒரு கொலை முயற்சி அரங்கேறி உள்ளது. விரைந்து செயல்பட்டு என்னை பத்திரமாக மீட்ட பாதுகாப்புப் படை வீரர்களுக்கு நன்றி. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாதுகாப்புப் படை அதிகாரியுடன் செல்போனில் பேசினேன்” என்று டிரம்ப் கூறினார்.

யார் இந்த கோல் தாமஸ் ஆலன்?

கலிபோர்னியா மாகாணம், டொரன்ஸ் நகரை சேர்ந்த கோல் தாமஸ் ஆலன், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் இளநிலை பட்டமும், கணினி அறிவியலில் முதுநிலை பட்டமும் பெற்றவர்.

நல்லாசிரியர் விருது பெற்ற நபர்

சி2 எஜுகேஷன் என்ற கல்வி நிறுவனத்தில் பகுதி நேர ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2024 டிசம்பரில் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு எந்தவொரு குற்ற வழக்கிலும் இவர் சிக்கியது இல்லை. முதல் முறையாக இவர் மீது குற்ற வழக்கு பதிவுசெய்யப்பட்டு உள்ளது. தாக்குதல் பின்னணியிலும் இவரை தவிர வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை.

தனி நபராக செயல்பட்டு உள்ளார் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி கண்டனம்

பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “வாஷிங்டன் டிசி ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் அதிபர் டிரம்ப், அவரது மனைவி, துணை அதிபர் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பியதை அறிந்து மிகுந்த மனநிம்மதி அடைந்தேன்.

வன்முறைக்கு இடமில்லை

ஜனநாயகத்தில் வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை. அதிபர் டிரம்ப் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். துணை அதிபர் வான்சும் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பியது மகிழ்ச்சி”, இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

==================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in