ஐரோப்பாவை தகிக்கும் வெப்பஅலை : 40°C-க்கே உருகும் சாலைகள், தண்டவாளங்கள் : பரிதவிக்கும் பொதுமக்கள்..

ஐரோப்பா வாட்டி வதைக்கும் வெயிலால், சாலைகள், தண்டவாளங்கள் உருக, பொதுமக்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சி வீடுகளில் ஒடுங்கி கிடக்கிறார்கள்.
scorching heatwave batters Europe, causing roads and railway tracks to melt
scorching heatwave batters Europe, causing roads and railway tracks to meltAI generated
2 min read

புரட்டி போட்ட சூப்பர் எல் நினோ

சூப்பர் எல் நினோவின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளை ஒரு கை பார்த்து வருகிறது. எங்கு பார்த்தாலும் மின்வெட்டு, வெப்பத்தால் வளைந்து நெளிந்து போன ரயில் தண்டவாளங்கள், உருகும் சாலைகள், காட்டுத்தீ.

பசுமையை இழந்த ஐரோப்பா

இந்தக் காட்சிகள் ஏதோ ஒரு பாலைவன நாட்டில் அரங்கேறவில்லை. எப்போதும் குளுமையாக, பசுமை போர்த்தி காணப்படும் ஐரோப்பிய நாடுகளின் இன்றைய நிலை இதுதான்.

காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளை வெளிப்படுத்தும் எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

ஐரோப்பாவில் 40°C முதல் 43°C வரை

பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன், டென்மார்க் போன்ற நாடுகளில் வெப்பநிலை 40°C முதல் 43°C வரை பதிவாகி சாதனைகளை முறியடித்து வருகிறது.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி, கடுமையான வெப்ப அலையினால் (Heat Wave) ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 85% பேர் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் என்பது வேதனைக்குரிய விஷயம்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கோடையில் 45°C முதல் 50°C வரை வெப்பநிலை பதிவாவது சாதாரணமான ஒன்றாக இருக்கும்போது, ஐரோப்பாவில் வெறும் 40°C வெப்பநிலையே இவ்வளவு பெரிய தேசியப் பேரிடராக மாறி இருக்கிறது.

அதற்கான காரணங்களை பார்ப்போம்

1. ஐரோப்பிய நாடுகள் பொதுவாகக் கடும் குளிரைச் சந்திப்பவை. எனவே அங்குள்ள வீடுகள் வெப்பத்தை வீட்டிற்குள்ளேயே தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தடிமனான சுவர்கள், இரட்டை அடுக்குக் கண்ணாடி ஜன்னல்கள் (Double Glass Windows) கொண்டு கட்டப்பட்டு இருக்கும்.

குளிர்காலத்தில் வரப்பிரசாதமாக இருக்கும் இந்த வடிவமைப்பு, கோடையில் வீடுகளை ஒரு 'அவன்' (Oven) போல மாற்றிவிடுகிறது. வெப்பம் உள்ளே நுழைந்தால் எளிதில் வெளியேறாது. வீடே அனலில் தகிக்கும்.

இந்தியாவில் பாரம்பரியமாகவே வீடுகள் அதிக காற்றோட்டத்துடன் (Cross Ventilation), உயரமான கூரைகள், முற்றம் மற்றும் வெப்பத்தைக் கடத்தாத கல் அல்லது டைல்ஸ் தரைகளுடன் கட்டப்படுகின்றன.

இது இயற்கையாகவே வீட்டின் வெப்பத்தைக் குறைக்க உதவுகிறது.

2. ஐரோப்பாவில் கடுமையான கோடைக்காலம் சில நாட்களுக்கு மேல் நீடிப்பதில்லை என்பதால், அங்கு ஏசி பயன்பாடு மிகவும் குறைவு.

ஆனால் இந்தியாவில் மூன்று மாத காலத்திற்கும் மேல் கோடை வெப்பம் இருக்கும் என்பதால், ஏசி பயன்பாடு அதிகம்.

ஐரோப்பாவில் மொத்தமாக பார்த்தால் சுமார் 20% வீடுகளில் மட்டுமே AC வசதி உள்ளது.

3. நீண்ட பகல் பொழுது: ஐரோப்பா பூமியின் வட பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு கோடையில் பகல் பொழுது மிக நீளமாக இருக்கும் (இரவு 9 அல்லது 10 மணி வரை வெளிச்சம் இருக்கும்).

இதனால் கட்டிடங்களும் சாலைகளும் தொடர்ந்து பல மணி நேரம் வெப்பத்தை உறிஞ்சிக் கொண்டே இருக்கின்றன.

இந்தியர்களின் பிறப்பிலிருந்தே அதிக வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவர்கள். இதற்கு காரணம் வாழும் இடத்தில் புவியியல் அமைப்பாகும்.

வெப்பம் அதிகரிக்கும் போது நம் உடல் அதிக வியர்வையை வெளியேற்றித் தன்னைத் தானே குளிர்வித்துக் கொள்கிறது.

ஆனால் குளிர்ந்த வானிலைக்குப் பழகிய ஐரோப்பியர்களின் உடல் இந்த திடீர் மாற்றத்தைத் தாங்க முடியாமல் ஹீட் ஸ்ட்ரோக், நீரிழப்பு பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

ஐரோப்பாவில் வெப்ப அலையின் போது காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், உடலின் வியர்வை எளிதில் உலருவதில்லை.

ஜெர்மனி மற்றும் பிரான்சில் வெப்பத்தின் காரணமாக கான்கிரீட் சாலைகள் வெடித்துச் சிதறியுள்ளன. ரயில் தண்டவாளங்கள் வெப்பத்தால் விரிவடைந்து வளைந்து போவதால், ரயில்களின் வேகம் பெருமளவு குறைக்கப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா தனது மின்சாரத் தேவைக்கு அணு ஆற்றலையே (Nuclear Energy) பெரிதும் நம்பியுள்ளது. இந்த அணு உலைகளைக் குளிர்விக்க நதிகளின் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் தற்போது நதிநீரே சூடாகிவிட்டதால், பாதுகாப்பு கருதி பிரான்சின் 'EDF' மின் நிறுவனம் தனது அணு மின் உற்பத்தியைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகளின் கருத்துப்படி, இது வெறும் தற்காலிக வானிலை மாற்றம் அல்ல. இது காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவு.

உலக சராசரியை விட ஐரோப்பா கண்டம் இரண்டு மடங்கு வேகத்தில் வெப்பமடைந்து வருகிறது. முன்பு பல தசாப்தங்களுக்கு ஒருமுறை வந்த வெப்ப அலை, தற்போது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது.

இது ஐரோப்பிய நாடுகளில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in