

Sheikh Hasina to return to Bangladesh on December 16: Official announcement!
வங்க தேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 2 ஆண்டுகளாக டெல்லியில் தஞ்சமடைந்துள்ள நிலையில், வருகிற டிசம்பர் 16- ஆம் தேதி வங்க தேசம் திரும்ப உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்க தேசத்தில் நாடு தழுவிய போராட்டம்
கடந்த 2024 ஆம் ஆண்டு, வங்க தேசத்தில் நாடு தழுவிய மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, அப்போதைய வங்கதேச பிரதமரும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி, இந்தியாவில் தஞ்சமைந்தார்.
ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை - சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்
போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக, அதாவது போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகவும் அதனால் வங்க தேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயமானது ஷேக் ஹசீனாவை குற்றவாளி எனக் குறிப்பிட்டு, அவருக்கு மரண தண்டனையும் விதித்தது.
இந்த தீர்ப்பையடுத்து வங்கதேச அரசு ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து வங்க தேசத்திற்கு நாடு கடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதையடுத்து இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக இந்திய அரசு தெரிவித்திருந்தது.
மரண தண்டனையை ஏற்கவும் தயார்
முன்னதாக, முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டிசம்பரில் தான் வங்கதேசம் செல்ல உள்ளதாகவும் , அங்கு சென்று தனக்கு எதிரான வழக்கை எதிர்கொள்ளப் போவதாகவும், தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அதனையும் ஏற்கத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஷேக் ஹசீனா டிசம்பர் 16 ஆம் தேதி வங்கதேசம் திரும்பவிருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் சையத் மொசம்மல் அலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், வங்கதேச அரசுக்கு சொந்தமான விமானத்தில் தான் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டார். அதனால் தற்போதைய அரசு டெல்லியிலிருந்து அவர் டாக்கா திரும்புவதற்கு தேவையான விமான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஷேக் ஹசீனாவின் உதவியாளர் அபு ஒபைதா அரின் கூறுகையில், வங்கதேசம் திரும்ப டிச.16 ஆம் தேதியை ஷேக் ஹசீனா தேர்வு செய்திருப்பதாகவும், அந்நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் வங்கதேசம் பெற்ற வெற்றியை தனது மக்களுடன் இணைந்து கொண்டாடவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனா நிச்சயமாக நாடு திரும்புவார் என்பதில் தங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும், அவர் மீண்டும் வந்த பிறகு அவரது தலைமையின் கீழ் அமைதி, செழிப்பு, ஸ்திரத்தன்மையை நோக்கி வங்கதேசம் மீண்டும் முன்னேறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
========