

சர்வதேச விண்வெளி மையம்
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா ஆகியவை இணைந்து, வான்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன.
இந்த விண்வெளி நிலையத்துக்கு அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன், ரஷ்யாவின் சோயூஸ் விண்கலங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
விண்வெளி மையத்தில் 7 வீரர்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு செய்கின்றனர். பொதுவாக 6 மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் மாற்றப்படுவது வழக்கம்.
மூன்று பேர் விண்வெளி பயணம்
அதன்படி அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தை சேர்ந்த அனில் மேனன், ரஷ்ய விண்வெளி வீரர்கள் பியோட்டர் துப்ரோவ், அன்னா கிகினா ஆகியோர் நேற்று இரவு சோயூஸ் எம்எஸ்-29 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டனர்.
சோயூஸ் எம்எஸ்-29 விண்கலம்
கஜகஸ்தான் நாட்டில் உள்ள பைக்கானூரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இவர்களின் விண்கலம் நேற்று இரவு இந்திய நேரப்படி இரவு 8.17 மணி) புறப்பட்டது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அனில் மேனனுக்கு இது முதல் விண்வெளிப்பயணமாகும். விண்கலம் புறப்படுவதற்கு முன் அனில் மேனன் எக்ஸ் தளத்தில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
அனில் மேனன் மகிழ்ச்சிப் பதிவு
“கஜகஸ்தானில் இருந்து சோயூஸ் எம்எஸ்-29 விண்கலம் மூலம் விண்வெளிக்குச் செல்வதிலும், நாசா மற்றும் எக்ஸ்பெடிஷன் 74/75-க்கு ஆதரவாக 8 மாத காலப் பணியை தொடங்குவதிலும் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நாசா, நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்பானவர்களுக்கு எனது நன்றி. நாளை விடியப்போகும் நாளுக்காக காத்திருக்கிறேன்” என்று அனில் மேனன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ ஆய்வை மேற்கொள்ளும் மேனன்
48 வயதாகும் அனில் மேனன் சர்வதேச விண்வெளி மையத்தில் ஆறுமாத காலம் தங்கி இருப்பார். நீண்டகால விண்வெளி பயணத்தால் ஏற்படும் உடலியல் விளைவுகள் குறித்த ஆய்வை மேனன் மேற்கொள்ளவிருக்கிறார்.
நீண்ட துார விண்வெளி பயணங்களின் போது, பூமியின் உதவியின்றி விண்வெளி வீரர்களே, தங்களுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்வதற்கான சாத்தியம் குறித்தும் அவர் ஆய்வு செய்ய உள்ளார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட மருத்துவ கருவிகளுக்கு தேவையான செமிகண்டக்டர்களை விண்வெளியில் புவிஈர்ப்பு இல்லாத சூழலில் உற்பத்தி செய்யும் ஆய்விலும் அவர் ஈடுபட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
====================