

பிரதமர் மோடி முதல் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரை பல உலக தலைவர்களின் பாராட்டைப் பெற்ற இந்திய விமானி ஸ்மித் மச்சார் தொடர்பான சம்பவத்தில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அவரை தாக்கிய ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி ஹமாம் அல் ஹமாமி, விமானத்தை தகர்க்கவே திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் கோர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி Flydubai விமானம் புறப்பட்டது.
அந்த விமானத்தை இந்தியாவை சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார் இயக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது காக்பிட்டுக்குள் இருந்த கோடரியால் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி திடீரென அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த போதிலும் ஸ்மித் மச்சார் தைரியமாக செயல்பட்டார்.
விமானத்தின் கட்டுப்பாட்டை இழக்காமல் நிலைமையை சமாளித்து, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க உதவினார்.
இதன் மூலம் 174 பயணிகளின் உயிரும் காப்பாற்றப்பட்டது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஹமாம் அல் ஹமாமியிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அதில், விமானத்தை தகர்க்க திட்டமிட்டிருந்ததாகவும், மரணம் குறித்து தனக்கு பயமில்லை என்றும் அவர் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஹமாம் அல் ஹமாமிக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்க UAE ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக மரண தண்டனை கோரப்படலாம் என்ற தகவல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் 174 பேரின் உயிரைக் காப்பாற்றியதற்காக ஸ்மித் மச்சாருக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்தன.
பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்ட தலைவர்கள் அவரை பாராட்டியதுடன், இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
=====================