

அதிபர் டொனால்டு டிரம்ப்
US federal court in Massachusetts invalidated the Trump administration's $100,000 fee on new H-1B visas, ruling it an unlawful tax that was not authorized by Congress :
அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து சர்ச்சைகளின் நாயகனாக திகழ்ந்து வருகிறார் டொனால்டு டிரம்ப். வரி உயர்வில் தொடங்கி ஈரான் போர் வரை அவர் எடுத்த பல முடிவுகள் அமெரிக்காவின் வெளிநாட்டு உறவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கின்றன.
டிரம்பின் பல உத்தரவுகளை நீதிமன்றங்கள் ரத்து செய்தாலும், அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாக இல்லை.
எச்-1பி விசா
அமெரிக்காவில் வெளிநாட்டினர் தற்காலிகமாக தங்கி வேலை செய்வதற்காக எச்-1பி விசா வழங்கப்படுகிறது. குறிப்பாக, தொழில்நுட்ப நிறுவனங்கள் திறமையான வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த இந்த விசா பயன்படுகிறது.
குலுக்கல் முறையில் இந்த விசா புதிய விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த நடைமுறையில் மாற்றம் செய்தார் டிரம்ப்.
விசா கட்டணம் ரூ.88 லட்சம்
ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த எச்-1பி விசா கட்டணத்தை சுமார் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது ட்ரம்ப் அரசு. இந்த விசாவை பெறுபவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரவை எதிர்த்து வழக்கு
இந்தச் சூழலில் எச்-1பி விசா கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி அமெரிக்காவின் 20 மாகாணங்களின் அரசுகள் சார்பில் மாசச்சூசெட்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
பேரவையை மீறி அதிபரின் செயல்பாடு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியோ சொரோகின் அளித்த தீர்ப்பில், ‘அமெரிக்க பேரவையின் அனுமதியின்றி அதிபர் ட்ரம்ப், எச்-1பி விசா கட்டணத்தை உயர்த்தி உள்ளார். அவருக்கு அத்தகைய அதிகாரத்தை பேரவை வழங்கவில்லை. இதை இந்த வழக்கில் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
டிரம்ப் முடிவு சட்ட விரோதம்
அதனால் இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் அரசின் முடிவு சட்டவிரோதமானது என நீதிமன்றம் அறிவிக்கிறது. மேலும், இந்த அறிவிப்பு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் உத்தரவு ரத்து
எச்-1பி விசா கட்டண உயர்வால் அதற்கான விண்ணப்பங்கள் தற்போது அமெரிக்காவில் குறைந்துள்ளது. இந்தச் சூழலில் இத்தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாத தகவலின் படி எச்-1பி விசாவுக்கான ஒரு லட்சம் டாலர் கட்டணத்தை 85 பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர்.
கடந்த நிதியாண்டில் 3.43 லட்சம் பேர் எச்-1பி விசா கேட்டு விண்ணப்பித்திருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது.
டிரம்ப் அரசுக்கு பெரும் பின்னடைவு
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு டிரம்ப் அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதை எதிர்த்து ட்ரம்ப் அரசு மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
========