
ரஷ்யா - உக்ரைன் போர் :
Russia Ukraine War Ceasefire Update : ரஷ்யா - உக்ரனை இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சண்டை நீடித்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வருவதில் அதிபர் டிரம்ப் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கான முன்னெடுப்புகளில் ஈடுபட்டுள்ள அவர், ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச அழைப்பு விடுத்தார். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
டிரம்ப் - புதின் சந்திப்பு :
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. புதினுக்கு அமெரிக்க அரசு சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய தரப்பில் அதிபர் புதின் உடன் வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ், நிதியமைச்சர் அண்டன் சிலுன்னோவ் மற்றும் 2 மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
உக்ரைன் போர், பேச்சுவார்த்தை :
இந்தச் சந்திப்பின்போது அமெரிக்க - ரஷ்ய உறவு, உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் டிரம்ப் - புதின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய புதின், “நமது இரு நாடுகளும் பொதுவான எதிரிகளுடன் எவ்வாறு போராடின என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம்.
புதின், டிரம்ப் செய்தியாளர் சந்திப்பு :
உக்ரைனின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற டிரம்ப்பின் விருப்பத்திற்கு நான் உடன்படுகிறேன். பரஸ்பர ஒப்பந்தம் உக்ரைனின் அமைதியைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “புதின் உடனான இந்தச் சந்திப்பு ஆக்கப் பூர்வமாக இருந்தது. ஆனால் 3 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் உக்ரைன் போர் நிறுத்த விவகாரம் தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இதுவரை நான் போனில் பேசவில்லை. விரைவில் அவருடன் பேச உள்ளேன்.
போர் நிறுத்தத்திற்கான முடிவு ஜெலென்ஸ்கி கையில் தான் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளும் இதில் கொஞ்சம் தலையிட்டு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.
முடிவுக்கு வராத உக்ரைன் விவகாரம் :
டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக இருநாடுகளும் தெரிவித்தாலும், உக்ரைன் விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படாதது பின்னடைவாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க : ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் : அதிபர் டிரம்ப் நம்பிக்கை
ரஷ்யா வருமாறு புதின் விடுத்த அழைப்பை டிரம்ப் ஏற்றுக் கொண்டார். அதன்படி, மாஸ்கோவில் இரு தலைவர்களும் சந்திப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
===