

வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் விற்பனை
Donald Trump Warns Netflix Warner Bros Pictures Discovery Bid Deal : வார்னர் ப்ரதர்ஸ் ஸ்டூடியோஸ் பேட்மேன் மற்றும் சூப்பர்மேன் உள்ளிட்ட சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை கொண்ட டிசி காமிக்ஸ் போன்ற, பெரும் திரைப்பட உரிமைகளை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாகும்.
நெட்ஃபிளிக்ஸ் வாங்குகிறது
அதனை ஒடிடி ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ் 83 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில், 7.48 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் செய்து இருக்கிறது. இது உலக அளவில் பெரிய ஒப்பந்தமாகும். பொழுதுபோக்கு துறையில் ஏற்கனவே கோலோச்சி வரும் நெட்ஃப்ளிக்ஸ், இதன்மூலம் யாரும் அசைக்க முடியாத ஜம்பவனாக இருக்கும்.
இரு நிறுவனங்களுக்கான இணைப்பிற்கு 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, சந்தையில் பெரும்பங்கை ஆக்கிரமித்து இதர நிறுவனங்களை அழிக்க நெட்ஃப்ளிக்ஸ் முயல்வதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
நெட்ஃப்ளிக்ஸிற்கு ட்ரம்ப் செக்
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் புகழ்பெற்ற ஹாலிவுட் ஸ்டுடியோவான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதன்படி, “ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் ஏற்கனவே மிகப் பெரிய சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. இந்த சூழலில் ஸ்டூடியோவையும் வாங்குவது ஒரு பிரச்னையாக இருக்கலாம். இந்த விவகாரத்தில் நானும் ஈடுபடுவேன்" என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஹாலிவுட்டின் உயர் அடுக்கினரிடையே நம்பிக்கையின்மை, கவலையை ஏற்படுத்தி இருக்கும் $83 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை, அமெரிக்க அரசின் ஒழுங்குமுறை நடவடிக்கை குழு பரிசீலிக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
டிரம்ப் கட்டப் பஞ்சாயத்து
முன்னதாக வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோ விற்பனைக்கு வருவதாக அறிவிப்பு வெளியானதுமே பல முன்னணி நிறுவனங்களும் அதனை வாங்க முயற்சித்தன. குறிப்பாக ட்ரம்பின் தீவிர ஆதரவாளரும், பாரமவுண்டின் தலைவருமான டேவிட் எலிசனும் அந்த ஸ்டூடியோவை வாங்க முயற்சித்தார். அப்படி நடந்தால் அதனை சுமூகமாக நானே முடித்து கொடுக்கிறேன் என ட்ரம்பும் வெளிப்படையாக பேசியிருந்தார்.
நெட்ப்ளிக்ஸ் மீது டிரம்ப் கோபம்
ஆனாலும், கடும் போட்டிகளுக்கு மத்தியில் சுமார் 25 ஆண்டு வரலாறு மட்டுமே கொண்ட ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ், நூற்றாண்டு கடந்த தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவை வாங்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இந்நிலையில் தான் இந்த ஒப்பந்தத்தில் பிரச்சினை இருப்பதாக ட்ரம்ப் பேசியுள்ளார்.
ஒப்பந்தம் - யாருக்கு பலன்?
தற்போதைய ஒப்பந்தம் நிறைவடைந்தால், நெட்ஃப்ளிக்ஸ், போட்டி ஸ்ட்ரீமிங் தளமான HBO மேக்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோக்களை சொந்தமாக்கிக் கொள்ளும். அதன் மூலம் நெட்ஃப்ளிக்ஸுக்கு ஹாரி பாட்டர் படங்கள், லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் சாகா மற்றும் டிசி ஸ்டுடியோவின் சூப்பர் ஹீரோக்களான பேட்மேன், சூப்பர்மேன் மற்றும் வொண்டர் வுமன் உள்ளிட்ட அனைத்தும் நெட்ப்ளிக்ஸ் வசமாகும்.
=====