வைகோவின் வலது கரம் மல்லை சத்யா :
Mallai Sathya Protest Against MDMK : மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக, வைகோவின் வலது கரமாக இருந்தவர் மல்லை சத்யா. கட்சியில் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் அவர் இருக்கிறார். வைகோவின் மகன் துரை வைகோவை, கட்சிக்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்த மல்லை சத்யா, படிப்படியாக ஓரம் கட்டப்பட்டார். ஒரு கட்டத்தில் வைகோவால் துரோகி முத்திரை குத்தப்பட்டதால், கடும் அதிருப்தி அடைந்த மல்லை சத்யா, மதிமுக கூட்டங்களை புறக்கணித்தார். மேலும் வைகோ, துரை வைகோவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
மல்லை சத்யா உண்ணாவிரதம் :
வைகோ தன்மீது வைத்த கடும் குற்றச்சாட்டுகளுக்கு நீதி கேட்டு ஆகஸ்டு 2ம் தேதி, அதாவது நாளை மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம்(Mallai Sathya Hunger Strike) மேற்கொள்கிறார். சென்னையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எதேச்சாதிகார போக்கில் துரோகப் பட்டத்தை சுமத்தி ஒவ்வொரு காலகட்டத்திலும் நிர்வாகிகளைத் தொடர்ந்து வைகோ வெளியேற்றி வந்தார் என்பதை நாடு உணர்ந்துள்ளது.
துரோகி என களங்கப்படுத்துவதா? :
32 ஆண்டுகள் பணியாற்றிய கட்சியிலிருந்து என்னை துரோகி என்று சொல்லி களங்கப்படுத்தி அரசியலிலிருந்து துடைத்தெறிய வைகோ முயற்சிப்பதோடு, சகாக்களை கொண்டு அவதூறு பிரச்சாரம் செய்து காயப்படுத்துகிறார். உட்கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாளை சென்னை தீவுத்திடல் அருகில் சிவானந்த சாலையில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்துகிறோம்.
மேலும் படிக்க : ’துரை’க்காக எனக்கு ’துரோகி’ பட்டமா? : வைகோவை சாடும் மல்லை சத்யா
வைகோவால் கைவிடப்பட்டோர் வாருங்கள் :
கட்சிக்காக உழைத்து களைத்துப் போனவர்கள், வைகோவால் கைவிடப்பட்டவர்கள் வர வேண்டும். தலைவனா தொண்டனா என்று வரும்போது தலைவர் பக்கமே நின்று பழக்கப்பட்ட பொது சமூகத்தின் பொது புத்தி முதல் முறையாக ஒரு தொண்டனின் பக்கம் நின்று இருப்பதை நாடு பார்த்துக் கொண்டு இருக்கிறது” இவ்வாறு மல்லை சத்யா(Mallai Sathya) கேட்டுக் கொண்டுள்ளார்.