அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் ? :
Tamil Nadu BJP Central Committee Meeting in Chennai : சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக-பாஜக கூட்டணி, பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கூட்டணியில் இருந்து டிடிவி. தினகரன், ஓபிஎஸ் வெளியேறியது, தமிழக பாஜகவில் நிலவும் அதிருப்தி, அண்ணாமலை மீது குருமூர்த்தி வைத்த குற்றச்சாட்டுகள் குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்(Nainar Nagendran), மூத்த நிர்வாகிகளை அழைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். இதில் அண்ணாமலை கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
டெல்லியில் தமிழக பாஜக நிர்வாகிகள் ஆலோசனை
துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்ற நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள தமிழக பாஜக நிர்வாகிகள், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.
நிர்மலா சீதாராமன் சென்னை வருகை
அடுத்து வரும் 14ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகிறார். தமிழக பாஜகவில் இருக்கும் சிக்கல்கள், தேசிய ஜனநாயக கூட்டணியை(NDA Alliance) ஒருங்கிணைத்து செல்வதற்கான வேலைகளை அவர் முன்னெடுப்பார் என்று தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக 16ம் தேதி தமிழக பாஜக மையக் குழு கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் இதற்கு தலைமை வகிக்கிறார்.
16ம் தேதி பாஜக மையக்குழு கூட்டம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் நிலவும் குழப்பங்கள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. 16ம் தேதி காலை 7 மணி முதல் மாலை வரை நீண்ட ஆலோசனை கூட்டங்களை நடத்த பி.எல்.சந்தோஷ்(PL Santhosh) திட்டமிட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் வியூகம், கூட்டணி பேச்சுவார்த்தைகள், தலைவர்களுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.
மேலும் படிக்க : நான் வாங்கிய முதல், ஒரே அசையாச் சொத்து இதுதான் : அண்ணாமலை விளக்கம்
தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை
பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ், டிடிவி தினகரனை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் பி.எல். சந்தோஷ் ஈடுபடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைக்க பாஜக தயாராக இருப்பதாக கூறப்படும் நிலையில், நிர்மலா சீதாராமன், பி.எல். சந்தோஷ் வருகை குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கூறப்படுகிறது.
=====