தொழிலில் வெற்றியாளர் எலான் மஸ்க் :
Elon Musk About Political Entry : அமெரிக்காவின் பிரபல தொழிலதிபராக எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், டெஸ்லா நிறுவனம் உள்ளிட்ட தொழில்களில் கொடி கட்டி பறக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு வலது கரமாக செயல்பட்ட அவர், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, முக்கிய பதவியையும் அலங்கரித்தார்.
எலான் மஸ்க்கின் ’அமெரிக்கா கட்சி’ :
அதிபர் ட்ரம்புடன் ஏற்பட்ட கருத்து மோதலை தொடர்ந்து, அரசு பதவியில் இருந்து விலகிய அவர், ’அமெரிக்கா கட்சி’(America Party) என்ற பெயரில் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி, அடுத்த தேர்தலில் களமிறங்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
மஸ்க்கை கிண்டல் செய்த ட்ரம்ப் :
ஆனால், எலான் மஸ்க் கட்சி தொடங்கியதை கிண்டல் செய்த அதிபர் ட்ரம்ப்(Donald Trump), அமெரிக்காவில் இரு கட்சி முறையே இருப்பதாகவும், மூன்றாவது கட்சி என்பது அபத்தமாகவே முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
’அரசியல்’ எனக்கு விருப்பமில்லை :
இந்தநிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எலான் மஸ்க், “ அரசியல் கட்சி தொடங்குவதில் எனக்கு விருப்பமில்லை. ராக்கெட் தயாரிக்கிறேன். கார்கள், இயந்திர கருவிகளை உருவாக்குகிறேன். அதைப்போன்று கட்சி நடத்துவது எளிது கிடையாது. என் நிறுவன பொருட்களை மக்கள் பயன்படுத்துவதே எனக்கு கிடைக்கும் மகிழ்ச்சியே போதும்.
அமெரிக்காவில் மோசமான அரசியல் :
அரசியல் வசனங்களை தயாரிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால், நாட்டின் ஒரு அமைப்பு மோசமடைந்து போயிருக்கும் போது, அதை சரிசெய்ய கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. நாட்டின் எதிர்காலத்திற்கு ஆபத்துகள் காத்திருகின்றன. அவற்றை வேடிக்கை பார்க்க முடியாது. எனவேதான் கட்சி தொடங்கி உள்ளேன்” இவ்வாறு மஸ்க் பேசினார்.
தோளில் மஞ்சள் நிறத்துண்டு போட்டு, அவர் உடலை அசைத்தவாறு பேசிய பேச்சு, நம்மூர் அரசியல்வாதிகளை நினைவுபடுத்துவது போலவே இருந்தது.
====