

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்
UPI Transactions Value October 2025 Record : டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்வது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பெரு நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை டிஜிட்டல் பரிவர்த்தனை விரிவடைந்து விட்டது. கடைக்கோடி கிராமங்களில் உள்ள பெட்டிக் கடைகளிலும் டிஜிட்டல் முறையில் பணம் பரிமாற்றம் செய்வதை பொதுமக்கள் அதிகம் விரும்புகின்றனர்.
யுபிஐ சாதனை
இந்தியாவில் இணையவழியில் மேற்கொள்ளப்படும் ஒட்டுமொத்த பணப் பரிவர்த்தனையில் யுபிஐ 85% பங்கினை வகிக்கிறது. தீபாவளி பண்டிகை காரணமாக அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை 74 கோடியைத்(UPI Transactions Value Per Day) தாண்டி சாதித்துள்ளது. இதுபோல, அதிகபட்சமாக தினசரி யுபிஐ பரிவர்த்தனை மதிப்பு இதுவரை 6 முறை ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது.
அக்டோபரில் வரலாற்று சாதனை
அந்த வகையில், இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் யு.பி.ஐ பரிவர்த்தனை மூலம் ஒரே மாதத்தில் ரூ.27 லட்சத்து 28 கோடி(UPI Transactions Value October 2025) அளவிற்கு பணப்பரிமாற்றம் நடைபெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
2,700 கோடி பரிவர்த்தனைகள்
அக்டோபர் மாதத்தில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் குறித்து தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், கடந்த மாதத்தில் யு.பி.ஐ. மூலமாக மொத்தம் 2 ஆயிரத்து 70 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இது செப்டம்பர் மாத கணக்கை காட்டிலும் 3.6% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வரிச்சலுகையால் பரிவர்த்தனை அதிகரிப்பு
இந்த பரிவர்த்தனைகள் மூலமாக இதுவரை இல்லாத வகையில் ரூ.27 லட்சத்து 28 கோடி பண பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரியில் சீர்திருத்தம் பண்டிகை கால எதிரொலியால் யு.பி.ஐ. மூலம் பண பரிமாற்றம் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தினமும் ரூ.66.8 கோடி பரிவர்த்தனை
தினமும் சராசரியாக ரூ.66.8 கோடி பரிவர்த்தனைகள் யு.பி.ஐ. மூலம் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் தெரிவித்துள்ளது. இது புதிய சாதனையாகும், தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற விற்பனைகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது.
ஆன்லைனில் அதிகம் செலுத்தல்
பண்டிகை கால ஷாப்பிங், போனஸ் மற்றும் தள்ளுபடிகள் மத்தியில், மக்கள் ஆன்லைனில் அதிக அளவில் பணம் செலுத்தியுள்ளனர். பண்டிகை காலத்தில் டிஜிட்டல் செலவினங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதைக் இது காட்டுகிறது.
எளிதில் அணுகும் வகையில் யுபிஐ
மொபைல் இணையத்தின் எளிதான அணுகல் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள QR கோடு கட்டண வசதி ஆகியவை யூபிஐ வசதியை அனைவரும் அணுகக் கூடிய ஒன்றாக மாற்றி இருப்பதை இது காட்டுகிறது.
==============