
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் :
India vs Pakistan Final Match in Asia Cup 2025 : 1984ம் ஆண்டு முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 41 ஆண்டுகளில் ஆசியக் கோப்பை தொடர் 17 முறை நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் இந்தியா அதிகபட்சமாக 8 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் பட்டம் வென்று இருக்கின்றன.
இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் :
17வது ஆசிய கோப்பை டி.20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட 8 நாடுகளில் இதில் பங்கேற்றன. சூப்பர் நான்கு சுற்றில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டிக்கு முன்னேறும் 2வது அணிக்கான சூப்பர் 4 இறுதிச் சுற்றில் வங்கதேசத்தை பாகிஸ்தான் எதிர்கொண்டது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய வங்கதேச அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களே எடுத்தது. இதனால் 11 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்று பைனலுக்கு தகுதி பெற்றது.
41 ஆண்டுகளில் முதன்முறை :
இதையடுத்து ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் 41 ஆண்டுகால வரலாற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் முதன்முறையாக இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 17வது ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்று என மோதிய 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Asia Cup T20 2025 Final : இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா
வெற்றிக் கோப்பை யாருக்கு? :
நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் வெற்றிக் கோப்பை யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இறுதிப் போட்டியிலும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியை செய்து ஆசிய கோப்பையை கைப்பற்றுமா? அல்லது பாகிஸ்தான் தோல்விக்கு பழிதீர்த்து, வெற்றி பெறுமா என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்துள்ளனர்.
================