
கிரிக்கெட் விளையாட்டு
New Test Format Introduce with 20 Overs Of 4 Innings : கிரிக்கெட் உலகில் ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கடும் மவுசு இருந்தது. ஒருநாள் கிரிக்கெட் வந்த பிறகு, இதற்கு வரவேற்பு சற்று குறைந்தது. அதிலும், டி20 வந்த பிறகு, அதற்கு தான் ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். எனவே தான் உலகப் கோப்பை போட்டிகளிலும் 50 ஓவர் ஆட்டங்களுக்கு பதிலாக டி20 கொண்டு வரப்படுகிறது. வீரர்களின் அதிவேக பேட்டிங், துல்லிய பந்துவீச்சு, விரைவாக ரன் குவிப்பு காரணமாக டி.20க்கு வரவேற்பு அதிகம்.
புதிய வடிவில் டெஸ்ட் கிரிக்கெட்
டெஸ்ட், ஒருநாள், டி20ஐ தொடர்ந்து நான்காவதாக ஒரு புதிய வடிவ கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்படுகிறது. "டெஸ்ட் ட்வெண்டி" என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வடிவம் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆழமான வியூகம், டி20 கிரிக்கெட்டின் அசுரத்தனமான வேகத்தை இணைத்து ரசிகர்களுக்கு விறுவிறுப்பை கொடுக்கும்.
தலா 20 ஓவர்கள், 4 இன்னிங்ஸ்
இதில் அணிகள் தலா 20 ஓவர்கள் கொண்ட 4 இன்னிங்ஸ்களை விளையாடும். போட்டிகள் வெள்ளை உடையில் சிவப்பு பந்துடன் விளையாடப்படும். ஒரே நாளில் நடைபெறும். டெஸ்ட் போட்டியில் இரண்டு வடிவங்களையும் சிறப்பாக ஒருங்கிணைக்க விதிகளில் மாற்றங்கள் செய்யப்படும்.
புதிய வடிவை உருவாக்கிய பஹிர்வானி
விளையாட்டு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் கௌரவ் பஹிர்வானி என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த புதிய வடிவத்திற்கு, ஏபி டி வில்லியர்ஸ், சர் கிளைவ் லாயிட், மேத்யூ ஹெய்டன் மற்றும் ஹர்பஜன் சிங் போன்ற உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் ஆலோசகர்களாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தந்து இருக்கிறார்கள்.
ஒரேநாளில் டெஸ்ட் போட்டி
ஒரு டெஸ்ட் ட்வென்டி போட்டி, மொத்தம் 80 ஓவர்களைக் கொண்டதாக இருக்கும். டெஸ்ட் போட்டியைப் போலவே, ஒவ்வொரு அணிக்கும் தலா இரண்டு இன்னிங்ஸ்கள் உண்டு. ஒவ்வொரு இன்னிங்ஸும், டி20 போட்டியைப் போல 20 ஓவர்களைக் கொண்டதாக இருக்கும். ஒரு முழு போட்டியும், ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படும். டெஸ்ட் போட்டியைப் போலவே, இந்தப் போட்டியிலும் வெற்றி, தோல்வி, 'டை' ஆகியவற்றுடன், 'டிரா' என்ற முடிவும் அமைந்து இருக்கும்.
டெஸ்ட் ட்வென்டி குறித்து கிரிக்கெட் ஜாம்பாவான்களை தெரிவித்த கருத்தினை பார்ப்போம்.
ஏபி டி வில்லியர்ஸ் : "டெஸ்ட் ட்வென்டி எதிர்காலத்துக்கான புதுமை. இது விளையாட்டின் பாரம்பரியத்திற்கு மதிப்பளிப்பதோடு, இளம் வீரர்களுக்கு புதிய கனவைத் தருகிறது.
ஹர்பஜன் சிங் : "கிரிக்கெட்டிற்கு ஒரு புதிய இதயத் துடிப்பு தேவைப்பட்டது. இன்றைய இளைஞர்களை விளையாட்டின் உண்மையான ஆன்மாவுடன் இணைக்கும் ஒன்றை டெஸ்ட் ட்வென்டி செய்கிறது.
மேலும் படிக்க : இந்தியாவின் மிகப்பெரிய 2 வது ஸ்டேடியம் தயார்! இவ்வளவு கோடியா?
2026ல் இருந்து டெஸ்ட் ட்வென்டி
டெஸ்ட் ட்வென்டியின் முதல் சீசன், 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்குகிறது. 6 அணிகள் பங்கேற்க உள்ளன. 3 இந்திய நகரங்களை மையமாகக் கொண்ட அணிகள் மற்றும் துபாய், லண்டன் மற்றும் அமெரிக்காவை மையமாகக் கொண்ட 3 அணிகள் இடம்பெறும். ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்கள் இருப்பார்கள். இதில் 8 இந்திய வீரர்கள் மற்றும் 8 சர்வதேச வீரர்கள் சமமாகப் பிரிக்கப்பட்டு, திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அணிகள் கட்டமைக்கப்பட்டு இருக்கும். வீரர்களின் திறமையான விளையாட்டு, ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து, டெஸ்ட் ட்வென்டியின் எதிர்காலம் இருக்கும்.
==============