

தங்கம் வென்ற மீராபாய் சானு :
Saikhom Mirabai Chanu Wins Gold Medal : அகமதாபாத்தில் நடந்த காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் ( Commonwealth Weightlifting 2025) போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு (Mirabai Chanu) கலந்து கொண்டார். ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு, ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ எடையும், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 108 கிலோ எடையும் தூக்கினார். இதன் மூலம் அவர் மொத்தமாக 193 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார்.
வெற்றிக் கனியை பறித்த சானு :
49 கிலோ எடைப் பிரிவில் நடந்த இந்த போட்டியில், மீராபாய் சானு மிக எளிதாக வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்தார். 31 வயதான மீராபாய் சானு கடந்த ஆகஸ்ட் மாதம் பாரிஸ் விளையாட்டுப் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்த பிறகு முதன்முறையாக காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார். இப்போது அதில் வெற்றிக்கனியை பறித்துள்ளார்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மீராபாய் சானு :
மணிப்பூரில் இம்பாலுக்கு அருகில் உள்ள நாங்போக் காக்சிங் என்ற கிராமத்தில் 1994ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி பிறந்தார் மீராபாய் சானு. இவரது குடும்பம் ஏழ்மையானது. எனவே, இளமைக் காலத்தில் அதிகமாக விறகுக் கட்டைகளை சுமந்து, குடும்ப வருமானத்திற்கு வழி வகுத்தார் சானு. இதுவே அவரது உடல்திறனை நன்கு வலுப்படுத்தி பின்னாளில் பளுதூக்குதலுக்கு பெரும் பங்காற்றியது.
சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் :
2014 காமன்வெல்த் போட்டியில் 48 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சர்வதேச அரங்கில் கால் பதித்த மீரா பாய் சானு, 2017ல் அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அந்த போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
மேலும் படிக்க : ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் : இளவேனில் வாலறிவன் தங்கம்
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 49 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானு, கர்ணம் மல்லேஸ்வரிக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 2வது இந்திய பளுதூக்கும் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
2022ல் காமன்வெல்த் போட்டிகளில் 49 கிலோ பிரிவில் மொத்தம் 201 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த இரும்பு பெண்மணி மீரா பாய் சானு, இப்போது மீண்டும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
====