
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 2025 :
GST Council Meeting 2025 Delhi : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. நீண்ட காலமாக பொதுமக்கள், மாநில அரசுகள் எதிர்பார்க்கும் வரி விகித மறுசீரமைப்பு பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
ஜிஎஸ்டி கட்டமைப்பு :
ஜிஎஸ்டி அமைப்பு, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என்ற விகிதங்களைக் கொண்டுள்ளது. இதில், 5 மற்றும் 18 சதவீதம் என்ற இரு வரி விகிதங்களுக்கு, தற்போதைய 12 மற்றும் 28 சதவீத விகிதங்களில் இருக்கும் பொருட்களை நகர்த்தப்பட திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் இனி வரும் காலத்தில் 5 மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி(GST Tax) பலகை மட்டுமே இருக்கும்.
அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும் :
இந்த மாற்றம் கொண்டு வரப்படுவதால், மக்கள் அன்றாட பயன்படுத்தும் பொருட்கள் முதல் உயர்தர பொருட்களின் மீதான வரி குறைந்து விலைகளை கணிசமாக குறையும். இந்த மாற்றம், பொதுமக்களின் வாழ்க்கை செலவை குறைத்து, பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் ஆலோசனை :
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு(GST Council Meeting) முன்னதாக, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் 8 மாநிலங்கள் டெல்லியில் சந்தித்து மத்திய அரசிடம் இருந்து வரி மறுசீரமைப்பு செய்வதில் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய பாதுகாப்பை கோருவது என்று முடிவு செய்யப்பட்டது.
மாநில அரசுகளுக்கு பாதிப்பு, மக்களுக்கு நன்மை :
12 சதவீத விகிதத்தில் உள்ள பொருட்களை 5 சதவீத விகிதத்திற்கு மாற்றுவதால் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஆண்டுக்கு ரூ.80,000 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இது மாநில அரசுகளுக்கு சிக்கலை உருவாக்கலாம். ஆனால் நுகர்வோருக்கு நன்மை கிடைக்கும்.
175 பொருட்களுக்கு வரி குறைப்பு? :
சராசரி ஜிஎஸ்டி விகிதம் 10 சதவீதத்திற்கு கீழ் குறையலாம்: தற்போது அனைத்து பொருட்களின் மீதான சராசரி ஜிஎஸ்டி விகிதம் 11.5 சதவீதமாக உள்ளது, சுமார் 175 பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதம்(GST Tax Reduced Goods) குறைக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதில் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், பாதாம், ஸ்னாக்ஸ், ரெடி டூ ஈடி உணவு பொருட்கள், ஜாம், நெய், வெண்ணெய், ஊறுகாய், முரப்பா, சட்னி, வாகனங்கள், டிராக்டர்கள், எலக்ட்ரானிக்ஸ், ஏசி, குளிர்சாதன பெட்டிகள் போன்றவை அடங்கும்.
மேலும் படிக்க : GST: ஆகஸ்டு வசூல் ரூ.1.86 லட்சம் கோடி : தமிழகத்தில் ரு.11,057 கோடி
ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலிய பொருட்கள் :
இவற்றின் வரி குறைப்படுவதால், பொதுமக்களுக்கு நன்மை கிடைக்கும். பெட்ரோல், டீசல், LNG, LPG, CNG போன்றவை ஜிஎஸ்டிக்கு வெளியே இருக்கின்றன. இவற்றை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வருவது பற்றியும் டெல்லி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். "அடுத்த தலைமுறை" ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.
==========
.