

அரசியல் சட்ட அமைப்பு நாள்
Vice President CP Radhakrishnan Parliament Speech in Tamil : நாட்டின் அரசியல் சட்ட அமைப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அரசமைப்பு வளாகம் என்று தற்போது அழைக்கப்படும், நாடாளுமன்ற பழைய கட்டிடத்தில், இதையொட்டி சிறப்பு கூட்டம் நடைபெற்றது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், இரு அவைகளின் எம்பிக்கள் இதில் கலந்து கொண்டனர்.
தமிழில் துணை ஜனாதிபதி உரை
துணை ஜனாதிபதியான பிறகு முதல் முறையாக நாடாளுமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழில் தனது பேச்சை தொடங்கினார். ”தாயின் அன்பாய், தந்தையின் அறிவாய், குருவின் ஒளியாய், தாயாய், தந்தையாய், குருவாய், தெய்வமாய், நாம் அனு தினமும் வழிபடுகிற, இன்றைய புனித பாரத அன்னையின் பொற்பாதங்களை முதற்கண் பணிந்து வணங்குவோம், என்று தமிழில் தெரிவித்தார்.
காஷ்மீரில் அதிக வாக்குகள் பதிவு
பின்னர் ஆங்கிலத்தில் உரையாற்றிய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்வோம். ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு அதிகளவில் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.
அனைவருக்கும் அதிகாரம் அளித்தல்
நமது அரசியலமைப்பு சட்டம், பாரதம் ஒன்று என்பதையும், அது என்றென்றும் ஒன்றாக இருக்கும் என்பதையும் நிரூபித்துள்ளது. சமூக நீதி, பின்தங்கிய வகுப்பினருக்கு பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கான நமது உறுதிப்பாட்டை அரசியலமைப்பு சட்டம் பிரதிபலிக்கிறது.
வளர்ச்சி அடைந்த இந்தியா
வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உலகளவில் மாறிவரும் சூழ்நிலையில், நீதித்துறை, நிதி போன்ற பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.
====