

பிகார் சட்டசபை தேர்தல்
Bihar Assembly Election 2025 2nd Phase Update in Tamil : பிகார் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 22ம் தேதியோடு முடிவடைகிறது. மொத்தம், 243 தொகுதிகள் கொண்ட இம்மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. எதிர்க்கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இணைந்து, 'மஹாகட்பந்தன்' என்ற கூட்டணியை அமைத்துள்ளன.
அரியணைக்கு கடும் போட்டி
ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற தவிப்புடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற கனவுடன் மஹாகட்பந்தன் கூட்டணியும் களம் இறங்கி இருப்பதால், இந்த தேர்தல் தேசிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முதற்கட்ட தேர்தலில் அதிக வாக்கு
முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், பிகார் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக 65.08 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
கொண்டாடும் அரசியல் கட்சிகள்
'அதிக வாக்குப்பதிவு ஆளுங்கட்சிக்கு ஆதரவான சமிக்ஞை' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். முதல் கட்ட தேர்தலில் 100 தொகுதிகள் பெறுவோம் என, பா.ஜ.,வைச் சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி நம்பிக்கை தெரிவித்தார்.
அதே சமயம் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி உள்ளிட்டோர், அதிக ஓட்டுப்பதிவானது ஆட்சிக்கு எதிரான அலையாகவும், மாற்றத்திற்கான ஓட்டுகள் என்றும் கொண்டாடினர்.
122 தொகுதிகள் - நாளை வாக்குப்பதிவு
இந்தநிலையில், 122 தொகுதிகளில் 2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதற்கான பிரசாரங்கள் நேற்று மாலையுடன் ஓய்ந்தன. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியினர் முதல் கட்ட தேர்தல் அனுபவத்தை பயன்படுத்தி இறுதி கட்ட தேர்தலில் கூடுதல் இடங்களை பெறும் முனைப்புடன் பிரசாரம் மேற்கொண்டனர்.
20 மாவட்டங்களில் தேர்தல்
2ம் கட்ட தேர்தல் நடைபெறுவதால், இந்தியா - நேபாள எல்லை 72 மணிநேரம் மூடப்பட்டு இருக்கிறது. 20 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்.
களத்தில் 1,306 வேட்பாளர்கள்
மொத்தம் 1,306 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில், 136 பேர் பெண்கள். இந்த தேர்தலில், 3.7 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். அவர்களுக்காக 45,000க்கும் மேற்பட்ட இடங்களில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் பாதுகாப்பு
அரசியல் பரபரப்பு நிறைந்த பூர்ணியா, அராரியா, கிஷன்கஞ்ச், கதிஹார் ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சீமாஞ்சல் பிராந்தியத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு, முஸ்லிம்களின் எண்ணிக்கை 17 சதவீதமாக உள்ளது.
2020 சட்டசபை தேர்தலில் இந்த 122 தொகுதிகளில் பாஜக 42; நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் 20 இடங்களை வென்றன. எதிர்க்கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் 33; காங்கிரஸ் 11; இடதுசாரிகள் ஐந்து இடங்களை வென்றன.
அடுத்த முதல்வர் யார்?
இந்த முறை யாருக்கு எத்தனை இடங்கள், ஆட்சி அமைக்க போவது யார் என்பது வாக்கு எண்ணிக்கை நாளான நவம்பர் 14ல் தெரிய வரும். அடுத்த முதல்வர் நிதிஷ்குமாரா? தேஜஸ்வி யாதவா? என்பதை மக்கள் தீர்மானிக்க போகிறார்கள். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் மீண்டும் என்டிஏ ஆட்சி தான் என்று கூறி இருந்தால், அதிக வாக்குகள் பதிவானது யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து இருக்கிறது.
====================