
டிரம்பிற்கு விரைவில் பதிலடி :
Minister Piyush Goyal on US Tariffs on India : ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை எதிர்த்து, அதை தடுக்கும் வகையில், இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்து இருக்கிறது அமெரிக்கா. அதிபர் டோனால்ட் டிரம்பின் இந்த முடிவுக்கு இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யா, சீனா, பிரேசிலுடன் தனது வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியா முடிவு செய்து இருக்கிறது.
இந்தியாவின் வேகமான வளர்ச்சி :
இந்தநிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய வர்த்தத்துறை அமைச்சர் பியூஷ் கோயல்(Piyush Goyal), ” இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. உலக வர்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது என்றார். இளைஞர்கள், திறமை வாய்ந்த குடிமக்கள் இந்தியாவின் பலம். இந்தியா பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்து வருகிறது.
மோடி தலைமையில் வலிமையான இந்தியா :
பிரதமர் நரேந்திர மோடியின்(PM Narendra Modi) தலைமையில் இந்தியா வலிமையாக உள்ளது. இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 6.5% வளர்ந்து வருகிறது, இது மேலும் அதிகரிக்கும். வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான இந்தியா, இந்த ஆண்டும் ஏற்றுமதியில் சாதனை படைக்கும்.
முதலீடு அதிகரிப்பு, வேலை வாய்ப்பு பெருகும் :
EFTA நாடுகள் இந்தியாவில் 100 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளன. இதன் மூலம் 10 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகளும், 50 லட்சம் மறைமுக வேலை வாய்ப்புகளும் உருவாகும். அக்டோபர் 1 முதல் EFTA ஒப்பந்தம் அமலுக்கு வரும். அதன் பலன்கள் படிப்படியாக தெரிய வரும்.
ராகுல் காந்திக்கு பதிலடி :
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கதவறான கருத்தை கூறுவது வெட்கக்கேடானது. அவரை நான் கண்டிக்கிறேன். இந்தியாவை அவர் குறைத்து மதிப்பிடுகிறார். இதை நாடு மன்னிக்காது. இந்தியாவின் நாணயம், அந்நிய செலாவணி கையிருப்பு, பங்குச் சந்தைகள் மற்றும் அடிப்படைகள் வலுவாக உள்ளன.
திறமை வாய்ந்த இளைஞர் சக்தி :
இந்தியாவின் 1.4 பில்லியன் இளைஞர்கள் திறமையானவர்கள். அவர்கள் உலக நாடுகளை ஈர்க்கும் சக்தி படைத்தவர்கள். 2000 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் வளர்ச்சி அபாரமானது. IT துறை ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கியுள்ளது. Covid-19 நெருக்கடியை இந்தியா ஒரு வாய்ப்பாக மாற்றியது.
மேலும் படிக்க : இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை இல்லை : டிரம்ப் பிடிவாதம்
சவால்களை சமாளித்து வெற்றி பெறுவோம் :
"சவாலான காலங்களில் இந்தியா எப்போதும் வெற்றி பெறும்" என்று அவர் கூறினார். எனவே யாருடைய அச்சுறுத்தலுக்கும் இந்தியா அடிபணியாது, இதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு பியூஷ் கோயல் பேசினார்.
============