
இந்தியா மீது அமெரிக்கா வரி போர் :
Shashi Tharoor on US Tariffs on India : இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்காவின் டோனால்ட் டிரம்ப் அரசு 50 சதவீத வரியை விதித்து இருக்கிறது. இதன் மூலம் இந்தியா மீது நேரடியாக வரி போரை தொடுத்து இருக்கிறது அமெரிக்கா. இதன் விளைவுகள் படிப்படியாக தெரிய வரும் என்று கூறப்படுகிறது. அமெசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுக்கு இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளன. ஏனென்றால், 50 சதவீத வரியை கட்டிவிட்டு, பொருட்களை விற்பனை செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதுதான் உண்மை.
நமக்கு அமெரிக்கா முக்கியமில்லை :
அமெரிக்காவின் அடாவடித்தனம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி சசி தரூர் “இந்தியாவுடனான உறவை மதிக்கவில்லையா என்பதை அமெரிக்காவிடம் நாம் கேட்க வேண்டும். அவர்களுக்கு இந்தியா முக்கியமில்லை என்றால் நமக்கும் அமெரிக்கா முக்கியமில்லை. இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரியை விதித்து இருக்கும் நிலையில், அந்நாட்டு பொருட்கள் மீது நாம் 17 சதவீதம் மட்டுமே வரி விதித்து வருகிறோம்.
அமெரிக்க பொருட்களுக்கு 50% வரி :
அமெரிக்காவின் ஒருதலைப் பட்சமான நடவடிக்கைக்கு பதிலடியாக நாமும் அமெரிக்க பொருட்களுக்கான வரியை 50 சதவீதம் அளவுக்கு உயர்த்த வேண்டும். அமெரிக்காவுடனான நமது வர்த்தக உறவு 90 பில்லியன் டாலராக உள்ளது. 50 சதவீத வரி விதிப்பு நமது வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
இந்திய பொருட்களை வாங்குவது குறையும் :
அமெரிக்காவின் குறைந்தபட்ச வரி விதிப்பால் பலனடைந்த நமது போட்டியாளர்களான வியட்நாம், இந்தோனேசியா, பாகிஸ்தான், வங்க தேசம், சீனா தங்களது பொருட்களை அமெரிக்க சந்தையில் குறைந்த விலையில் விற்பனை செய்யும். அப்போது நமது பொருட்களை வாங்க அமெரிக்க நுகர்வோர்கள் பெரிதும் யோசிப்பர். இதனால், இந்திய பொருட்களின் விற்பனை குறையும்.
மேலும் படிக்க : அமெரிக்காவை நம்பி இந்தியா இல்லை : காங்கிரஸ் எம்பி சசிதரூர் உறுதி
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்போம் :
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை நம்மை விட இரண்டு மடங்கு சீனா வாங்குகிறது. ஆனால், சீனாவுக்கு அமெரிக்கா 90 நாட்கள் அவகாசம் வழங்கி இருக்கிறது. நமக்கு 3 வாரங்கள் மட்டுமே அனுமதி. இதிலிருந்தே அமெரிக்கா நம்மை எப்படி நடத்துகிறது என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. அதற்கேற்ப நாமும் எதிர்வினை ஆற்றினால் தான், அமெரிக்கா வழிக்கு வரும்” இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.
------