
முதுபெரும் தலைவர் அச்சுதானந்தன் :
VS Achuthanandan Achievements in Tamil : கேரளா முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான வி. எஸ். அச்சுதானந்தன் நேற்று காலமானார். அவருக்கு வயது 102. பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் நாளை முழு அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட உள்ளது.
தலைசிறந்த பொதுவுடைமைவாதி :
தனது சிந்தனைகளாலும், போராட்டங்களாலும் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்கான தொடர்ந்து போராடிய பொதுவுடைமைவாதி. 2006 முதல் 2011 வரை கேரள முதலமைச்சராக இருந்த அவர், மக்களின் நன்மதிப்பை பெற்ற முதலமைச்சராக இருந்தார். ஊழலுக்கு எதிரான தொடர் போராட்டங்கள், வீட்டு வசதி திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உறுதியான நிலைப்பாடு, வி. எஸ். அச்சுதானந்தனை(V S Achuthanandan) மக்கள் மனதில் நீங்க இடம்பெற்ற வலிமையான தலைவராக மாற்றியது.
போராட்ட நாயகர் அச்சுதானந்தன் :
ஆட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, மக்களுக்கான போராட்டங்களில் தொய்வின்றி பங்கெடுத்த ஒரு சில தலைவர்களில் வி.எஸ். அச்சுதானந்தனும் ஒருவர். பினராயி விஜயன் அரசாங்கத்தின் முதல் 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில், கேரளாவின் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராக இருந்தார். இதுவே அவர் அதிகாரப்பூர்வமாக வகித்த கடைசி பதவி.
மேலும் அடிக்க : VS Achuthanandan: கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்..
தொழிலாளி முதல் முதலமைச்சர் வரை :
சாதாரண குடும்பத்தில் பிறந்து(VS Achuthanandan Biography), ஏழாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு, துணிக்கடையில் தொழிலாளியாக ஆரம்பித்த அவர் வாழ்க்கை பயணம், முதல்வர் பதவி வரை நீடித்தது. காங்கிரசில் பொதுவாழ்க்கை தொடங்கி, இடதுசாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கேற்று, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி தோன்ற முக்கிய காரணமாக அமைந்தவர் வி. எஸ். அச்சுதானந்தன்.
ஏழு முறை எம்எல்ஏ, நேரடியாக முதல்வர் :
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், 10 முறை சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு 7 முறை எம்எல்ஏ பதவியை வி. எஸ். அச்சுதானந்தன் அலங்கரித்தார். அச்சுதானந்தனின் அரசியல் பயணமே வித்தியாசமானது. கட்சிக்கு வெற்றி கிடைக்கும் போது அவர் தோற்பார். அவர் வெற்றி பெறும் போது, கட்சி ஆட்சிக்கு வராது. ஆனால், 2006 சட்டமன்ற தேர்தலில் அச்சுதானந்தனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் வெற்றிபெற அவர் முதலமைச்சரானார். 2011 தேர்தலில் வி.எஸ். வெற்றி பெற்றாலும், சிபிஎம் பெரும்பான்மை பெறாததால் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டங்கள் :
50 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளாவில் நடந்த சுற்றுச்சூழல், தொழிலாளர் மற்றும் பெண் சார்பு போராட்டங்களில் வி. எஸ். அச்சுதானந்தன்-ன் பங்களிப்பு இருந்தது. சுற்றுச்சூழலை ஒரு அரசியல் பிரச்சினையாக முதன்முதலில் முன்னிறுத்தியது அச்சுதானந்தன்தான். அவரது வாழ்க்கையை ஒரு வரலாறுதான். ஆளுமை மிக்க தலைவராக மக்களால் போற்றப்பட்ட அச்சுதானந்தன், மண்ணை விட்டு மறைந்தாலும், அவர் ஆற்றிச் சென்ற அரும்பணிகள் கேரளாவை என்றும் வழிநடத்தும். மக்கள் நாயகனாக, அப்பழுக்க அரசியல்வாதியாக, தூய்மைக்கு இலக்கணமாக ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று வருங்கால சமுதாயத்திற்கு வாழ்ந்து காட்டி சென்றிருக்கிறார் அச்சுதானந்தன்.
-------