
பாரத் ராஷ்ட்ரிய சமிதி :
MLC Kavitha Resignation From BRS Party : ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக உருவாக காரணமாக இருந்தவர் சந்திரசேகர ராவ். இவர் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற பெயரில் கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்தார். பின்னர் தனது கட்சியை பாரத் ராஷ்டிரியா சமிதி என மாற்றம் செய்தார்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு :
கடந்த சட்டமன்ற தேர்தலில் பிஆர்எஸ் கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் கட்சி, சந்திரசேகர ராவ் ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாக கூறி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
கட்சிக்குள் புகைச்சல், அதிருப்தி :
இதற்கு முத்தாய்ப்பாக, ஊழல்களுக்கு கட்சி நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் காரணம் என்ற சந்திரசேகர ராவ் மகள் கவிதா குற்றம்சாட்டியது, பிஆர்எஸ் கட்சியில் புயலை கிளப்பியது. இவர் ஆந்திர சட்டமேலவை உறுப்பினராகவும் ( MLC ) உள்ளார்.
கட்சியில் இருந்து கவிதா சஸ்பெண்ட் :
காலேஸ்வரம் அணை திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி சிபிஐ விசாரணைக்கு தெலங்கானா அரசு பரிந்துரை செய்து இருக்கிறது. இதற்கு முன்னாள் அமைச்சரும், தனது உறவினருமான ஹரிஷ் ராவ்தான் காரணம், அவரால் தனது தந்தை மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு இருப்பதாக கவிதா குரல் கொடுத்தார். இந்தச்சூழலில், கவிதாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து சந்திரசேகர ராவ் நேற்று நடவடிக்கை எடுத்தார். கட்சி விரோத நடவடிக்கையில் அவர் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
எம்எல்சி பதவி ராஜினாமா :
இந்தநிலையில், ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த கவிதா, “கட்சிப் பொறுப்புகளை விலகுவதாகவும், எம்எல்சி பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளில் ஈடுபட்டேன். வட்டமேஜை மாநாடுகள், போராட்டங்கள், பெண்களுக்கான இடஒதுக்கீடு போன்ற பணிகளை மேற்கொண்டேன். இவை அனைத்தும் கட்சி விரோத நடவடிக்கைகளா?.
மேலும் படிக்க : BRS கட்சியில் இருந்து கவிதா சஸ்பெண்ட் : வெடிக்கும் உட்கட்சி மோதல்
கட்சியை கைப்பற்ற சதி :
எனது குடும்பத்தை சிதைக்க, பிஆர்எஸ் கட்சியை கைப்பற்ற சதி நடக்கிறது. அதன் முதல் அத்தியாயமாகத்தான் என்னை இடைநீக்கம் செய்திருக்கிறார்கள். எனது தந்தை கே.சந்திரசேகர ராவ் மற்றும் சகோதரர் கே.டி. ராமாராவ் ஆகியோருக்கும் இதேபோன்ற அச்சுறுத்தல் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும், நானும் எனது தந்தையும் எனது சகோதரரும் ஒன்றாக இருப்போம்.
ஹரிஷ் ராவ் மீது குற்றச்சாட்டு :
எனது உறவினரும் கட்சியின் முக்கிய நபருமான முன்னாள் அமைச்சர் ஹரிஷ் ராவ்தான் இவை அனைத்துக்கும் பின்னால் இருக்கிறார். காங்கிரசுடன் கைகோர்த்து, எங்களுக்கு எதிராக அவர் சதி செய்கிறார்.
நான் வேறு ஒரு கட்சியில் சேரப் போவதாகக் கூறப்படுவதை திட்டவட்டமாக மறுக்கிறேன். எனது அரசியல் எதிர்காலம் குறித்து வரும் நாட்களில் முடிவுகளை எடுப்பேன்.” இவ்வாறு கவிதா தெரிவித்தார்.
=========