
சூதாட்ட செயலிகளுக்கு தடை :
ED Case on Illegal Gambling App Ads : சூதாட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதேசமயம், சில செயலிகள் திறமையை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுக்கள் என்ற பெயரில் சூதாட்டங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.
நடிகர்கள் மீது வழக்குப்பதிவு :
அவ்வாறு கண்டறியப்பட்ட ஜங்லீ ரம்மி(Junglee Rummy), ஜீட்வின், பாரிமேட்ச்(Parimatch), லோட்டஸ் 365 போன்ற செயலிகளுக்கு ஆதரவாக விளம்பரங்களில் நடித்ததாக நடிகர்கள் பிரகாஷ்ராஜ்(Prakash Raj), விஜய தேவரகொண்டா, ராணா டகுபதி, மஞ்சு லட்சுமி, பிரணீதா, நிதி அகர்வால் ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.
தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக பிரமுகர்கள் அனன்யா நாகெல்லா, ஸ்ரீமுகி, வர்ஷீனி சவுந்தரராஜன், வசந்தி கிருஷ்ணன் உள்ளிட்ட 29 பேர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதல் தகவல் அறிக்கை பதிவு :
இவர்களுக்கு எதிராக விசாகப்பட்டினம், சூர்யாபேட்டை, சைபராபாத், மியாப்பூர், பஞ்சகுட்டா ஆகிய 5 இடங்களில் தனித்தனியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. புகார்தாரர்களில் ஒருவர் ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
29 பேரிடமும் விரைவில் விசாரணை :
அமலாக்கத் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் சிலர் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
செயலியின் சட்டவிரோத செயல்பாடு(Illegal Gambling App) தெரிந்ததும் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழ்த் திரையுலகை ஒரு பக்கம் போதை பொருள் பயன்பாடு விவகாரம் ஆட்டிப் படைத்து வரும் நிலையில், தெலுங்கு மற்றும் கன்னைட திரையுலகை அமலாக்கத்துறை வழக்குகள் பதம் பார்க்க தொடங்கி உள்ளன.
=======