
காவல்துறையின் ரத்த வங்கி சேவை
Kerala Police's Pol-Blood Drive Transforms Blood Donation : உயிர்காக்க அவசர அறுவை சிகிச்சைகள், நாட்பட்ட நோய்களுக்கான சிகிச்சை போன்றவற்றுக்கு தேவைப்படும் நேரங்களில் ரத்தம் கிடைக்காமல் நோயாளிகளும், அவர்களது குடும்பத்தினரும் படும் அவஸ்தை சொல்லி மாளாது. இதற்கு தீர்வு காணவே, ரத்ததான முகாம்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
மக்களின் சிரமங்களை குறைக்க கேரள போலீசார் 'ஆன்லைன்' ரத்த வங்கி சேவையை நடத்தி வருகிறார்கள். இந்த சேவையினால் தற்போது ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயன்பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.
2021ல் Pol-Blood சேவை அறிமுகம் :
கேரள காவல்துறை பொதுமக்களுக்கு உதவும் வகையில் Pol-Blood (போல் பிளட்) என்ற பெயரில் ஒரு ஆன்லைன் ரத்த வங்கி சேவையை 2021 ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தியது. ரத்தம் தேவைப்படுவோருக்கும், தன்னார்வ ரத்த தானம் செய்ய விரும்புவோருக்கும் பாலமாக இந்த சேவை செயல்பட்டு வருகிறது.
நாட்டிற்கே வழிகாட்டும் கேரள போலீஸ்
இடைத்தரகர் அல்லது தனியார் ரத்த வங்கி வாயிலாக ரத்தம் பெற அதிக தொகை செலுத்த வேண்டிய நிலைமையை தடுக்க, பிரத்யேக மொபைல் போன் செயலியை கேரள போலீசார் உருவாக்கினார்கள்(Kerala Police Blood Donation App). நாட்டிலேயே ஒரு காவல்துறை, இதுபோன்ற ஒரு சேவையை அதிகாரப்பூர்வமாக செல்போன் ஆப் மூலம் வழங்குவது இதுவே முதல் முறையாகும்.
Pol-Blood - செயல்பாடு எப்படி?
ரத்தம் தேவைப்படுபவர்கள் தங்கள் மொபைல் போனில், போல்பிளட் (Pol-Blood) என்ற பெயரில் உள்ள செயலியை பதிவிறக்கம் செய்து, தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யும் நபர்களின் அவசர தேவையை அறிந்து, அவர்களுக்கான ரத்த மாதிரி நேரடியாக பெற்றுத் தரப்படும். அவசர அறுவை சிகிசைகள், நாட்பட்ட நோய்களுக்கான சிகிச்சை போன்ற அவசியமான நேரங்களில் ரத்தம் கிடைக்காமல் நோயாளிகளும், அவர்களது குடும்பத்தினரும் படும் சிரமங்களை குறைப்பதே இந்த சேவையின் முக்கியமான நோக்கம்.
இடைத்தரகர்கள் ஒழிப்பு
இந்த சேவை கொண்டு வரப்பட்ட பிறகு, கேரளாவில் அதிக கட்டணத்தை வசூலிக்கும் புரோக்கர்கள், ஏஜெண்டுகளின் சுரண்டல் ஒழிக்கப்பட்டு விட்டது. மேலும், தன்னார்வ ரத்த தானத்தை அதிக அளவில் ஊக்குவிக்க முடிகிறது.
மேலும் படிக்க : 3 நிமிடத்தில் முறிந்த எலும்புகளை ஒட்டலாம்: பசையை கண்டுபிடித்த சீனா
கேரள போலீசுக்கு குவியும் பாராட்டு
உண்மையில் தேவைப்படுவோருக்கு சரியான நேரத்தில் ரத்தத்தை உறுதி செய்யவும் முடிகிறது. கேரள போலீசாரின் தன்னலமற்ற இந்த சேவைக்கு நாள்தோறும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இத்போன்று ஒவ்வொரு மாநிலமும், மக்களுக்கான சேவைகளை வழங்க முன் வந்தால், சுரண்டல்கள் என்பதே இல்லாமல் சாமான்ய மக்களுக்கு உண்மையான நன்மைகள் கிடைக்கும்.
======================