
ஜிஎஸ்டி வரி குறைப்பு :
GST 2.O Next Gen Reforms Rate 2025: அனைவரும் மிகவும் எதிர்பார்த்த ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நடைமுறையில் உள்ள நான்கு அடுக்கு வரி, 18%, 5% என இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை சாமான்ய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார். உப்பு முதல் கார் வரை பெரும்பாலான பொருட்களின் விலை குறைய இருக்கிறது. செப்டம்பர் 22ம் தேதி முதல்(Next Gen GST Reforms Effective Date) நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தால் விலை குறையும், விலை உயரும் பொருட்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
GST என்பது சரக்கு மற்றும் சேவை வரி ஆகும். நடைமுறையில் இருந்த கலால் வரி, VAT, சேவை வரி போன்ற மறைமுக வரிகளை மாற்றியமைத்த ஒரு வரி விதிப்பு முறையாகும். சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி நடைமுறைக்கு வந்தது. நான்கு அடுக்குகளாக ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியின் ‘தீபாவளி பரிசு’ :
ஜிஎஸ்டி வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளிக்குள் மக்களுக்கு பெரிய பரிசு காத்திருப்பதாக அறிவித்து இருந்தார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் :
இந்தநிலையில், 56வது ஜிஎஸ்டி கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்(Nirmala Sitharaman) தலைமையில், டெல்லியில் நேற்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இரண்டு அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி :
இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22ம் தேதி முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்(GST Slabs) என்று அறிவித்தார். ஏற்கெனவே இருந்த 5%, 12%, 18% மற்றும் 28% ஜிஎஸ்டி அடுக்குகளில் 12% மற்றும் 28% என இரண்டு அடுக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அதேசமயம், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், ஆடம்பர பொருட்களுக்கு 40% சிறப்பு வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சாமான்ய மக்களுக்கு பெருமகிழ்ச்சி :
ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு நடவடிக்கை சாமான்ய மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான நிதி சுமையை பெரிய அளவில் குறைக்கும். முக்கியமாக அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% ஆக மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு பொருட்களின் விலை 22ம் தேதி முதல் குறையும். இது நேரடியாக பலன் தரும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், ஆடம்பரப் பொருட்களுக்கு கூடுதல் வரி வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்று இருக்கிறார்கள்.
ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு அறிவிப்பால் விலை குறையும் பொருட்கள் என்ன என்பதை பார்ப்போம் :
யு.எச்.டி பாலுக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கன்டன்ஸ்டு மில்க், வெண்ணெய், நெய், பனீர், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12%ல் இந்து 5% ஆக குறைந்துள்ளது.
மால்ட், ஸ்டார்ச், பாஸ்தா, கார்ன்ஃப்ளேக்ஸ், பிஸ்கட், சாக்லெட்டுகள் மற்றும் கோகோ பொருட்கள் மீதான வரி 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்படுகிறது.
உலர் பழங்கள், பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12%ல் இருந்து 5%-ஆக குறைகிறது.
சர்க்கரை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியும் 5% ஆக மாற்றப்பட்டுள்ளது.
தாவர எண்ணெய், விலங்கு கொழுப்பு, இறைச்சி மற்றும் மீன் தயாரிப்பு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 5% ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்சர் உள்ளிட்ட பேக் செய்யப்பட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18%ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை அல்லது சுவை சேர்க்கப்பாடாத தண்ணீர், மினரல் வாட்டர் மீதான வரி 18% ல் இருந்து 5% ஆக மாற்றப்பட்டுள்ளது.
விவசாய இடு பொருட்கள் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உரங்கள், விதைகள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12% அல்லது 18%-லிருந்து 5% -ஆக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12% அல்லது 18% ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது.
தனிநபர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ்களுக்கு இனி ஜிஎஸ்டி வரி(GST for Insurance) என்பதே கிடையாது
பென்சில், கிரேயான்ஸ் உள்ளிட்ட எழுதுபொருட்கள், நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி சார்ந்த பொருட்கள் மீதான வரி பூஜ்யம் அல்லது 5% ஆக மாற்றப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பில் 32 இன்சுகளுக்கு மேலான டிவி, ஏசி, மானிட்டர், டிஷ் வாஷ் இயந்திரம் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் மீதான வரி 28%ல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
காலணி மற்றும் ஆடை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியும் 5% ஆக மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது.
ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 18%ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சிறிய கார்கள், 350 சிசி திறனுக்கு கீழான இருசக்கர வாகனம் மீதான ஜிஎஸ்டி வரி 28% ல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது(GST Reforms on Bike Car). அதேசமயம் கார் பாகங்கள் மீதான வரி 18% மாக இருக்கும். மின்சார வாகனங்கள் மீதான வரி 5% ஆக தொடரும்.
மேலும் படிக்க : டெல்லியில் GST கவுன்சில் கூட்டம்: 175 பொருட்கள் மீது வரி குறைப்பு!
விளையாட்டு பொருட்கள் மற்றும் பொம்மைகள், தோல், மரம் மற்றும் கைவினை பொருட்கள் மீதான வரி 5% ஆக நீடிக்கும்..
ஜிஎஸ்டி வரி சீரமைப்பால் விலை உயரும் பொருட்கள் குறித்தும் பார்ப்போம்.
ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட சிலவற்றின் வரி 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பான் மசாலா, குட்கா, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், சர்தா, பீடி உள்ளிட்ட பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்.
கார்பனேட்டட் குளிர்பானம், சோடா, இனிப்பு சேர்க்கப்பட்ட பானம் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 40% ஆக இருக்கும். இதற்கு முன்பு வரி விகிதம் 18% ஆக இருந்தது.
ஆடம்பர பொருட்கள், சொகுசு கார்கள், விளையாட்டு போட்டிக்கான டிக்கெட்டுகள், ப்ரீமியம் மதுபான வகைகள் மீதான வரியும் 40% ஆக இருக்கும்.
நிலக்கரி மீதான ஜிஎஸ்டி வரி 5% ல் இருந்து 18% ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பிட்ட இடங்களில் இயங்கும் உணவகங்கள், லாட்டரி உள்ளிட்ட சேவை துறை சார்ந்த ஜிஎஸ்டி வரியும் உயர்ந்துள்ளது.
பிரதமர் மோடி வரவேற்பு :
ஜிஎஸ்டி வரி குறைப்பு(GST 2.0 Reforms) பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சாமானியர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு இது பெரிதும் பயனளிக்கும் என்று தெரிவித்துள்ளார். சாமான்ய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, சிறுவணிகர்கள், வணிக நிறுவனங்கள் வியாபாரம் செய்வதை எளிமையாக்கும் என்று அவர் வரவேற்று இருக்கிறார். 140 கோடி மக்களுக்கு மத்திய பாஜக அரசு அளித்த தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைப்பு அமைந்துள்ளதாக அனைத்து தரப்பினரும் வரவேற்று உள்ளனர்.