
பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டிய இந்தியா :
Pahalgam Terror Attack Update : காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து ’ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம், தீவிரவாத முகாம்களை தகர்த்து, தீவிரவாதிகளை அழித்து, பாகிஸ்தானுக்கு இந்தியா படம் கற்றுக் கொடுத்தது.
மூளையாக செயல்பட்ட சுலைமான் ஷா :
இந்த தாக்குதல் தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய இந்திய பாதுகாப்பு படைகள், தாக்குதலுக்கு சுலைமான் ஷா(Sulaiman Shah) என்ற நபர் மூளையாக செயல்பட்டதை கண்டு பிடித்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் எலைட் பிரிவின் முன்னாள் கமாண்டோவாக பணியாற்றியதும் தெரிய வந்தது. சுலைமான் பற்றிய தகவல்களுக்கு காஷ்மீர் காவல்துறை ரூ.20 லட்சம் வெகுமதியையும் அறிவித்திருந்தது. லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியான சுலைமான் ஷா, ஹபீஸ் சயீத்தின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.
சுலைமான் ஷா சுட்டுக்கொலை :
பஹல்காம் தாக்குதல்(Pahalgam Attack) தீவிரவாதிகளை தொடர்ந்து தேடி வந்த இந்திய பாதுகாப்பு படையினர், ஸ்ரீநகர் அருகே தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருக்கும் தகவலை ரகசியமாக பெற்றனர். இராணுவம், சிஆர்பிஎஃப், காஷ்மீர் காவல்துறையின் இணைந்து ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரை கண்டதும் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்தப் பகுதியை சுற்றி வளைத்த ராணுவத்தினர் தீவிரவாதிகள் மீது கடும் தாக்குதல் தொடுத்தனர்.
இந்த சண்டையில், சுலைமான் ஷா என்ற ஹாஷிம் மூசா சுட்டுக் கொல்லப்பட்டான். அவனுடன் இருந்த மேலும் 2 தீவிரவாதிகளும், ராணுவத்தினரும் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகினர். மற்ற இருவரின் பெயர்களும் ஆப்கன், ஜிப்ரான் என்பதும் இவர்களும் பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் சுலைமான் கொல்லப்பட்டது படைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் சுலைமான் செயல்பாடுகள் :
பாகிஸ்தானில் இருந்து 2023ம் ஆண்டு இந்தியாவிற்குள் ஊடுருவிய சுலைமான், தெற்கு காஷ்மீரில் தீவிரவாதி செயல்களில் ஈடுபட்டு வந்தான் சுலைமான் ஷா. 2024 அக்டோபரில், சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கியது சுலைமான் ஷா தான். பாரமுல்லாவில் நடந்த மற்றொரு தாக்குதலிலும் அவருக்கு பங்கு இருந்தது. சுலைமானின் முக்கிய குறி வெளிநாட்டவராக இருந்தது. அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் இந்தியாவின் நன்மதிப்பே குறைப்பதே இவர்களின் முக்கிய திட்டமாகும்.
பெரிய தாக்குதலுக்கு சுலைமான் சதி :
சுலைமான் ஷா பதுங்கி இருந்த இடத்தில் கிடைத்துள்ள ஆயுத குவியல்கள், இவர்கள் மிகப்பெரிய தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டி இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. ராணுவத்தின் தாக்குதலில் சுலைமான் கொல்லப்பட்டதால், அவனது சதி முறியடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் பகுதியில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் வேட்டை தொடர்கிறது. ஆபரேஷன் மகாதேவ் வெற்றி அடைந்து இருப்பதால், பதுங்கி உள்ள தீவிரவாதிகள் அனைவரும் களையெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
====