
சீனாவில் பிரதமர் நரேந்திர மோடி :
PM Narendra Modi Trending in China Social Media : ஏழு ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு, ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா சென்று இருந்தார். இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்த நிலையில், இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக இருந்தது.
தலைவர்கள் சந்திப்பு, அமெரிக்கா கவலை :
தியான்ஜின் நகரில் நடைபெற்ற SCO மாநாடு உலக அளவில் முக்கியத்துவம் பெற்றது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினின் சந்திப்பை உலக நாடுகள் உற்று கவனித்தன. அவர்கள் என்ன பேசுகிறார்கள்? எத்தகைய முடிவை எடுக்கிறார்கள்? இவர்களின் சந்திப்பு நமக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது அமெரிக்காவின் கவலை.
ட்விட்டர், பேஸ்புக் வேலை செய்யாது :
சீனாவில் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட மேற்கத்திய சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவற்றை யாரும் பயன்படுத்த முடியாது. அதேசமயம் உள்நாட்டை சேர்ந்த வெய்போ சமூக வலைதளம்(PM Modi Trending in Weibo) மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது.
டிரண்டிங்கில் பிரதமர் மோடி :
SCO மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற நிலையில் வெய்போ சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்து இருந்தார். ஜப்பானில் இருந்து சீனா சென்றது முதல், மாநாடு முடிந்து இந்தியா திரும்பும் வரை பிரதமர் மோடி தான் அங்கு டிரெண்டிங்.
மோடியை தேடிய சீன மக்கள் :
அதேபோன்று, சீனாவில் கூகுள் பயன்பாட்டில் இல்லை. உள்நாட்டை சேர்ந்த பைடு என்ற இணைய தேடுதளமே பயன்பாட்டில் உள்ளது. இந்த தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த தகவல்களை சீனர்கள் அதிக அளவில் தேடி படித்து இருக்கிறார்கள்.
மோடி-புதின்-ஜின்பிங் - வைரல் :
வெய்போ சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டன. குறிப்பாக புதின், மோடி, ஜி ஜின்பிங் ஒன்றாக கலந்துரையாடிய புகைப்படம் மற்றும் வீடியோ அதிகமாக பகிரப்பட்டு சீனர்களால் ஆர்வமுடன் பார்க்கப்பட்டது.
மோடிக்கு குவியும் வரவேற்பு :
ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி ஒரே காரில் பயணம் செய்யும் புகைப்படம், வீடியோவும் வெய்போ தளத்தில் வைரலாக பரவியது. பிரதமர் மோடி நடை, உடை பாவனை வெகுவாக கவர்ந்து இருப்பதாக சீனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : SCO Summit 2025: அதிபர் புதினை சந்தித்ததில் மகிழ்ச்சி-பிரதமர் மோடி
செய்திகளில் மோடிக்கு முக்கியத்துவம்
SCO உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றாலும், ஏழு ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி கலந்து கொண்டதால், கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. ஆசிய நாடுகள் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் இந்த மாநாடு, தலைவர்கள் சந்திப்பு தொடர்பான செய்திகளுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்பட்டது. பெரும்பாலான பத்திரிகைகளில் முதல் பக்க செய்தியாக இடம் பிடித்தது.
======