
PM Narendra Modi Japan Visit : 2 நாட்கள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு பிரதமருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இருநாட்டு ஒத்துழைப்பு, முதலீடு, பல்வேறு துறைகளில் இணக்கமான செயலாற்றல் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
பிரதமர் மோடியின் ஜப்பான் பயணத்தின் மூலம் இந்தியா பெறப்போகும் பயன்கள் குறித்து பார்ப்போம் :
1. அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தியா- ஜப்பான் ஒத்துழைப்பு தொலைநோக்கு பார்வையுடன் இருக்கும். பொருளாதார கூட்டாண்மை, பொருளாதாரப் பாதுகாப்பு, இயக்கம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் புதுமை, சுகாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம்.
2. பாதுகாப்பு ஒத்துழைப்பு, சவால்களுக்கு பதிலளிக்க்கும் வகையில், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுவாக்க முடிவு.
3. இந்தியா - ஜப்பான் மனிதவள பரிமாற்றம் மூலம், ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே 5,00,000 பேர் பணியாளர்களாக செல்வார்கள், குறிப்பாக இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு 50,000 திறன் வாய்ந்த மற்றும் ஓரளவு திறன்பெற்ற பணியாளர்கள் சென்று வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
4. இந்தியாவுக்கு டிகார்பனைசிங் தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள், அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கான தொழில்நுட்பத்தை வழங்குவதோடு, இந்தத் துறையில் ஜப்பான் முதலீடும் ஊக்குவிக்கப்படும்.
5. இந்திய - ஜப்பான் டிஜிட்டல் கூட்டாண்மையின் அங்கமாக, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, டிஜிட்டல் திறன் மேம்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு, இணையம் சார்ந்த செயல்பாடுகளில் ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.
6. கனிம வளங்கள் துறையில் சுரங்க கூட்டு முதலீடுகள் மற்றும் முக்கியமான கனிமங்களை சேமித்து வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
7. நிலவின் துருவ ஆய்வுப் பணி தொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு இடையேயான கூட்டு முயற்சி செயல்படுத்தப்படும். சந்திரயான் 5 திட்டத்தில் இருநாட்டு ஒத்துழைப்புக்கு செயல் வடிவம் கொடுக்கப்படும்.
8. ஹைட்ரஜன்/அம்மோனியா குறித்த ஆராய்ச்சி, முதலீடு மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் இருநாடுகளும் இணைந்து கூட்டு முயற்சியுடன் செயல்படும்.
9. அடுத்த பத்தாண்டுகளுக்கு ஜப்பானிலிருந்து இந்தியாவிற்கு 10 ட்ரில்லியன் ஜப்பான் யென் ( இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ 6 லட்சம் கோடி ) தனியார் துறை முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
10. நம்பகமான செயற்கை நுண்ணறிவு சூழலியலை வளர்ப்பதற்காக பெரிய கணினி மொழி மாதிரிகள், பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கான ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.
மேலும் படிக்க : PM Modi: ’ஜப்பான்-இந்தியா தொழில்நுட்ப புரட்சி’: பிரதமர் மோடி உறுதி
11. பொருளாதாரங்களின் இயந்திரங்களாக விளங்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்திய - ஜப்பான் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மன்றம் தொடங்கப்படும்.
12. வணிகம், மக்களிடையேயான தொடர்புகள் மற்றும் கலாச்சார தொடர்புகளை வலுப்படுத்த இந்தியாவிற்கும் கன்சாய் மற்றும் கியூஷு ஆகிய இரு பகுதிகளுக்கும் இடையே வணிக மன்றங்களை நிறுவவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
=================