
1767ல் உருவாக்கப்பட்ட துர்க்கை சிலை :
Durga Devi Idol Worship on Vijayadashami 2025 in Uttar Pradesh : இன்றைய உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் முகோபாத்பாய் என அழைக்கப்பட்ட முகர்ஜி குடும்பத்தினர், 1767ம் ஆண்டு துர்காதேவி சிலையை வைத்து வழிபாடு நடத்தினார்கள்.
வைக்கோல், மூங்கில், சணல் கயிறு, களிமண்ணால் 6 அடி உயரத்தில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டு இருந்தது. 9 நாட்கள் நவராத்திரி வழிபாடு முடிந்ததும், 10ம் நாளான விஜய தசமி அன்று சிலையை ஆற்றில் கரைக்க முடிவு செய்தனர்.
அங்குலம் கூட நகராத சிலை
ஆனால், அந்த சிலையை ஓர் அங்குலம் கூட நகர்த்த முடியவில்லை. இதை அடுத்து, சிலையை துாக்கிச் செல்ல, 15க்கும் மேற்பட்ட பயில்வான்கள் அழைக்கப்பட்டனர். அவர்களின் முயற்சியும் வீணானது. இதையடுத்து,
கயிறுகளைக் கட்டி சிலையை நகர்த்த முயற்சித்தனர்; ஆனால் அதுவும் முடியவில்லை. இது அங்கு கூடியிருந்த அனைவரையும் வியப்பிலும், குழப்பத்திலும் ஆழ்த்தியது. என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிய முகர்ஜி குடும்பத்தினர் மறுநாள் பார்த்துக் கொள்ளலாம் என வீடு திரும்பினர்.
அங்கேயே தங்கியிருக்க துர்க்கை விருப்பம்
அன்றிரவு, முகர்ஜி குடும்பத்தின் தலைவரான காளி பிரசன்ன முகர்ஜியின் கனவில், துர்காதேவி தோன்றினார். ”நான் சிவனின் இருப்பிடமான காசியில் மகிழ்ச்சியுடன் உள்ளேன். என்னை இங்கிருந்து அகற்ற வேண்டாம். காசி மக்களுடன் நிரந்தரமாக இங்கேயே இருக்க விரும்புகிறேன். என்னை அகற்றி முற்பட வேண்டாம்” என உத்தர விட்டதாக நம்பப்படுகிறது.
258 ஆண்டுகளாக கரைக்கப்படாத சிலை
இதை தெய்வ வாக்காக ஏற்றுக் கொண்ட முகர்ஜி, குடும்பத்தினர், அன்றிலிருந்து இன்று வரை அந்தச் சிலையை அங்கேயே வைத்து வழிபட்டு வருகிறார்கள். இதன்படி, 1767 முதல், அந்தச் சிலையை அக் குடும்பத்தினர் வழிபாடு செய்து வருகின்றனர்.
துர்க்கையின் பழைய வீடு
வாரணாசியின் காசியில் உள்ள பெங்காலி டோலா பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோவில், 'துர்கா தேவியின் பழைய வீடு' என இன்றும் அழைக்கப்படுகிறது. நவராத்திரி விழாவான துர்கா பூஜை பண்டிகையின் போது, புதிய சிலை செய்து, விஜயதசமி அன்று ஆற்றில் கரைக்கும் வழக்கம் நாடு முழுதும் இருந்தாலும், முகர்ஜி குடும்பத்தினர் மட்டும் காலங்காலமாக இந்த ஒரே சிலையை வழிபட்டு வருகிறார்கள்.
மேலும் படிக்க : Ayudha Puja: ஆயுத பூஜை 2025: என்னென்ன பொருட்கள், வழிபடுவது எப்படி?
விஜயதசமி சிறப்பு பூஜை :
விஜயதசமியான இன்று துர்க்கை சிலைகள் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன(Durgadevi Worship on Vijayadashami). திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு வருகிறார்கள். கோவிலில், துர்காதேவி சிலையுடன், 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு சிலையும் அமைந்து இருக்கிறது. மேலும், 22 சிவலிங்கங்களுக்கும் இந்தக் கோவிலில் வழிபாடு நடத்தப்படுகிறது.
==========