

கோவில் நெரிசல் - 9 பேர் உயிரிழப்பு
Srikakulam Venkateshwara Temple Stampede : ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் பலாசா-காசிபுக்கா என்கிற இடத்தில் வெங்கடேஸ்வர சுவாமி கோவில் அமைந்து இருக்கிறது. இங்கு கடந்த வாரம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர். அளவுக்கு அதிகமாக பக்தர்கள் கூடியதே கூட்ட நெரிசலுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
பெருமாள் கோவில் - பின்னணி தகவல்
அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத இந்தக் கோவிலுக்கு எப்படி இவ்வளவு கூட்டம் வருகிறது. கோவிலை கட்டியது யார் என்ற ஆராய்ந்த போது சுவாரஸ்ய தகவல்கள் அதிகாரிகளுக்கே கிடைத்தது.
அண்மையில் கட்டப்பட்ட கோவில்
ஸ்ரீகாகுளத்தை சேர்ந்தவர் ஹரிமுகுந்த பண்டா. இவரதான் இந்தக் கோவிலின் நிர்வாகி. நான்கு மாதங்களுக்கு முன்பு தான் கட்டி முடிக்கப்பட்டது இந்தக் கோவில். இந்தக் கோவிலை கட்ட காரணம் என்னவென்று பார்த்தால், “ திருப்பதி கோவிலில் சரிவர தரிசனம் கிடைக்கவில்லை. சுவாமியைல தரிசிக்கவும் நீண்ட நேரம் ஆகிறது. எனவே இந்தக் கோவிலை கட்டினேன்” என்கிறார் ஹரிமுகுந்தா பண்டா.
விவசாய நிலத்தில் பெருமாள் கோவில்
தனது விவசாய நிலத்தில் கோவிலை கட்டிய இவர், ” பலமணி நேரம் காத்திருந்தாலும், திருப்பதி பெருமாளை சில வினாடிகள் தான் பார்க்க முடிகிறது. அந்தக் குறையை போக்கும் வகையில் வெங்கடேஸ்வர சுவாமி கோவிலை கட்டினேன்” என்று விளக்கம் தருகிறார்.
”ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற போது, பல மணி நேரம் காத்திருந்தேன். வரிசையில் நின்றும் பெருமாளை சேவிக்க பலமணி நேரம் பிடித்தது. இதுபற்றி என் அம்மாவிடம் கூறிய போது, அவர், நமக்கு சொந்தமான நிலத்தில் ஒரு பெருமாள் கோவில் கட்டு” என்றார். அவரது உத்தரவுக்கு பணிந்து இந்தக் கோவிலை கட்டியதாக கூறுகிறார் ஹரிமுகுந்தா பண்டா.
கோவிலில் எங்களுக்கு உரிமை கிடையாது
இந்தக் கோவிலுக்கு சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை. எனது அம்மா கொடுத்த நிலத்தில் கோவிலை கட்டினேன். எனக்கோ, என் பிள்ளைகளுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது என்கிறார்.
சொந்த நிலத்தில் சொந்த பணத்தில் கட்டினோம். இதற்காக திருப்பதியிலிருந்து 9 அடி உயர சிலை வாங்கி வந்தோம். அங்கிருந்து ஸ்ரீதேவி, பூமாதேவி சிலைகளும் வாங்கி வந்தோம். வேத பண்டிதர்களின் அறிவுரைப்படி ஒற்றைக் கல்லில் இந்தச் சிலையை செய்தோம்." என்று தெரிவித்தார்.
சொந்த வருமானத்தில் கோவில்
விவசாய வருமானத்தில் இருந்தே இந்தக் கோவில் கட்டப்பட்டதாகக் கூறும் பண்டா, இதற்காக யாரிடமும் நன்கொடையோ பங்களிப்போ பெறப்படவில்லை என்றார். தன்னைப் போல திருப்பதிக்கு தரிசனம் சென்ற பலரும் இதே போன்ற மனநிலையில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
கோவிலை கட்டி முடிக்க ஆறு ஆண்டுகள் ஆயின. கர்ப்பகிரகத்தில் உள்ள சிலை, திருமலை கோவிலில் உள்ளதே போலவே இருக்கும். பக்தர்களுக்காக தங்கும் விடுதிகளும் கல்யாண மண்டபமும் இங்கு கட்டப்பட்டுள்ளது. வழக்கமான பக்தர்களை விட கூட்டம் அதிகமாக இருந்ததால், சனிக்கிழமை இந்த துயரச் சம்பவம் நடந்து விட்டதாக அவர் வேதனையுடன் கூறுகிறார்.