
திவ்விய தேசங்களில் 2வது திருப்பதி :
Purattasi 2025 First Saturday Viratham Tirupati History : ஆந்திர மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வைணவத் தலம்தான் திருப்பதி. வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக 2ம் இடத்தில் இருப்பது திருப்பதி. திருமலையில் ஏழுமலையானும், திருச்சானூரில் பத்மாவதி தாயார் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். திருப்பதி என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், பெருமாள் கோவில் கொண்டிருப்பதை, ஏழு மலைகளை(Tirupati Temple) கொண்ட திருமலையில் தான்.
தமிழகத்தின் ஒருபகுதி திருப்பதி :
திருப்பதி என்ற சொல் திரு+பதி என்று பிரிக்கப்படுகிறது(Tirupati History in Tamil). வடமொழி சொல்லான பதி என்பதற்கு கணவன் (தலைவன்) என்று பொருளுண்டு, தமிழ் சொல்லான திரு என்பதற்கு புண்ணியம், தெய்வத்தன்மைவாய்ந்த, மேன்மைமிக்க என பல பொருள்கள் உண்டு. திருப்படி என்பதே மருவி திருப்பதி ஆனதாக கூறப்படுகிறது. திருமலை ஏழு மலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. ஆதிசேசனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு சேசாசலம் என்று பெயரும் உள்ளது. சேசாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகியவை மலைச் சிகரங்களின் பெயர்களாகும். இங்கு கிடைக்கப் பெற்ற கல்வெட்டுகளில் பெரும்பாலும் தமிழ் கல்வெட்டுகளாகும். பண்டைய தமிழகத்தில் தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக திருப்பதி விளங்கியது.
சங்க இலக்கியங்களில் திருவேங்கடம் :
உலகிலேயே பழமையும், பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் திருமலை மலைகள்தான். திருப்பதியின்(Tirupati Tirumala Hills) பழைய பெயரான திருவேங்கடத்தை சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளன. இந்த மலைகளை பண்டைய தமிழகத்தின் வடபுறத்து எல்லை என்கிறது சிலப்பதிகாரம். ஏழுமலையான் கோவில் கட்டப்பட்ட காலம் என்பது மட்டும் யாராலும் கண்டறிய முடியவில்லை. பல்லவர், சோழர், பாண்டியர், சாளுக்கியர், விஜயநகர மன்னர்களால், இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது.
கலியுக வைகுண்டம் திருப்பதி :
விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர், கோவிலுக்காக தங்கமும் மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாக தந்துள்ளார். இந்தக் கோவிலுடன் ஒட்டி நிறைய கோவில்களையும் கட்டியுள்ளார். திருப்பதியில் இருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கும் சந்திரகிரி விஜயநகர பேரரசின் 2ம்(Chandragiri Capital of Vijayanagara Empire) தலைநகரமாக விளங்கியது.
வைணவம் பெரிதாக பின்பற்றப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டில் ஆழ்வார்களால் கலியுக வைகுண்டம் என்று போற்றப்பட்டது திருப்பதி . 11ம் நூற்றாண்டில் இந்தக் கோவிலின் ஆச்சார அனுஷ்டானங்கள் இராமானுஜரால் முறைப்படுத்தப்பட்டது.
இஸ்லாமியர் படையெடுப்பின் தென்னிந்தியாவில் எந்த பாதிப்பும் இன்றி தப்பிய கோவில்களில் திருப்பதியும் ஒன்று. அப்போது, ஸ்ரீரங்கத்தில் இருந்து அரங்கநாதரின் திருவுருவச் சிலை, இங்கு கொண்டு வந்து பாதுகாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வை குறிக்க அப்போது கட்டப்பட்ட ரங்கநாத மண்டபம் இன்றும் திருப்பதியில் இருக்கிறது.
இஸ்லாமியர்கள் செல்லத் தயங்கிய திருமலை :
இஸ்லாமியர்களிடமிருந்து திருமலை கோயில் தப்பியதற்கு சுவாரசியமான வரலாறு ஒன்றும் இருக்கிறது. திருப்பதிக்கு வந்த முகாலய படையினர் மலைமேல் என்ன கோவில் இருக்கிறது எனக் கேட்டபோது, பன்றிக் கடவுளின் கோவில், அதாவது வராகப் பெருமாளின் கோவில்(Varahi Perumal Temple) என்று உள்ளூர் மக்கள் கூறியதாகவும், பன்றிகளின் மீது முகலாயர்களுக்கு இருந்த வெறுப்பால் அவர்கள் திருமலைக்கு செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.
முந்தைய தமிழகத்தில் முக்கியமான பகுதியாக விளங்கிய திருப்பதி, மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பின் போது, தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிகமாக இருந்ததால், திருப்பதி, திருக்காளத்தி, திருமலை மற்றும் சித்தூர் ஆகிய பகுதியில் அன்றைய ஆந்திரப் பிரதேசத்துடன் சேர்க்கப்பட்டன
திருப்பதி சுப்ரபாதம், திருப்பாவை :
திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு புகழ் பெற்ற கோவில். நவராத்திரி பிரம்மற்சவத்தை காண லட்சக் கணக்கானோர் வருவது வழக்கமான ஒன்று. திருமலைக் கோவிலில் தினமும் அதிகாலையில் 'ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்' (திருப்பள்ளி எழுச்சி) ஒலிபரப்பினாலும், மார்கழி மாதத்தில் மட்டும் தமிழ் திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்களை ஒலிபரப்புகிறார்கள்.
மேலும் படிக்க : Puratasi: புரட்டாசியில் அசைவம் கூடாது: ஆன்மீகத்தொடு கலந்த அறிவியல்
உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டு :
இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடு காப்புரிமையை பெற்றதாகும். சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற பொருட்களால் பிரத்தியேகமான ஒரு முறையில் தயாரிக்கப்படுகிறது. 1931ம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் என்பவர்.
திருமலையில் திருவிழாக்கள் :
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி மாத பிரம்மோற்சவம், மார்கழி உற்சவம் மிகவும் முக்கியமான விழாக்கள் ஆகும். ரத சப்தமி விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. அதிலும், கருட சேவை உலகப் புகழ்பெற்றதாகும். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் என்பதால், 30 நாட்களும் இங்கு பக்தர்கள் வருகை தந்து, ஏழுமலையானை சேவிப்பார்கள். அதிலும் சனிக்கிழமைகள், மூன்றாவது சனிக்கிழமை அன்று பக்தர்கள் கூட்டத்திற்கு அளவே இருக்காது. சில சமயம் 2 நாட்கள் காத்திருந்து பெருமாளை பார்க்க வேண்டி இருக்கும். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத மலையப்ப சுவாமி, உலகம் முழுவதும் இருந்து பக்தர்களை திருப்பதிக்கு வரச் செய்து அவர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏழுமலையானின் கருணை இருந்தால் மட்டுமே திருப்பதிக்கு செல்ல முடியும் என்று வைணவர்கள் கூறுவார்கள். புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று ஏழுமலையில் வாசம் செய்யும் வெங்கடாசலபதியை வழிபட்டு, வாழ்வில் உயர்வு பெறுவோம்.
==============