
தமிழக வெற்றிக் கழகம் :
SP Velumani on TVK Vijay : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்றது. அதில் திராவிடமும் தமிழ் தேசியமும் தவெகவின் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டன. பெரியார், அம்பேத்கர், அஞ்சலையம்மாள், வேலூ நாச்சியார் கொள்கைத் தலைவர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர். மாநாட்டில் தவெகவின் அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.
யாருடன் கூட்டணி? விஜய் வெளிப்படை :
திமுகவை கடுமையாக சாடி வரும் விஜய், அதிமுக பற்றி வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. எனவே, மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்ற சந்தேகமும் கிளப்பப்பட்டன. இதனிடையே, அதிமுக - பாஜக கூட்டணி(ADMK BJP Kootani) உறுதி செய்யப்பட்ட பிறகு, பாஜகவுடன் கூட்டணி வைக்கும் யாருடன் சேரப்போவதில்லை என்று விஜய் அறிவித்தார்.
எம்ஜிஆர் கட்சியை காப்பது யார்?
அண்மையில் மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் பேசிய விஜய்(TVK Vijay 2nd Madurai Manadu), தமிழகத்தில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என தெரிவித்த விஜய், எம்ஜிஆர் தொடங்கிய கட்சியை கட்டிக் காப்பது யார்? அதிமுக தொண்டர்களே அதை சொல்ல முடியாமல் வேதனையில் தவிக்கின்றனர். அதிமுக - பாஜக கூட்டணி என்பது பொருந்தாக் கூட்டணி என்று விமர்சித்து இருந்தார்.
விஜய்க்கு எந்த உரிமையும் கிடையாது :
இதுபற்றி கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி(SP Velumani), ”அரசியலுக்கு நடிகர்கள் பலர் வந்திருக்கிறார்கள். விஜய்யின் படங்களை பார்த்து நாங்கள் ரசித்துள்ளோம். மதுரை மாநாட்டில் அதிமுகவுக்கு இருக்கும் தலைமை எப்படி உள்ளது என்று பார்த்தீர்களா என்ற ரீதியிலாக விஜய் பேசி இருந்தார். மறைமுகமாக எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்துள்ளார். நான்கு ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. அவரைப் பற்றி பேசும் உரிமை விஜய் உள்பட யாருக்கும் கிடையாது.
மேலும் படிக்க : ”முடிவோடு வந்திருக்கிறார், அட்வைஸ் தேவையில்லை” : பிரேமலதா கருத்து
சிரஞ்சீவி நிலைதான் விஜய்க்கும் :
விஜய்க்கு கூடிய கூட்டத்தை விட ஆந்திர மாநிலத்தில் சீரஞ்சீவி பிரஜ்ஜா ராஜ்யம் கட்சி தொடங்கியபோது கூடிய கூட்டம் அதிகம். ஆனால், இப்போது கட்சியே இல்லாமல் அவர் கலைத்து விட்டு சென்றுவிட்டார். சாதாரண கட்சியின் தலைவர் கிடையாது எடப்பாடி பழனிசாமி. 53 ஆண்டுகள் வரலாறு உள்ள கட்சி அதிமுக. எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பு ஏற்பது உறுதி. இதனை விஜய் உள்பட யாராலும் தடுக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.
===============