

ADMK Criticized KN Nehru ED Case : அதிமுக அமைந்ததும் எல்லா கோப்புகளும் திறக்கப்படும் என்று அதிமுக கடும் விமர்சனம் செய்துள்ளது.
அமைச்சர் கே.என். நேரு மீது - முறைகேடு புகார்
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு.
நகராட்சித்துறையில் வேலை வாங்கித்தருவதாக லஞ்சம் மற்றும் டெண்டர் முறைகேடு புகார்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை சார்பில் பலமுறை கடிதங்கள் அனுப்பப்பட்டன.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் டிஜிபி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், புகாரை பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அதிமுக சார்பிலும் மனுத்தாக்கல்
அதிமுக எம்.பி. இன்பதுரை நகராட்சித் துறை வேலை வாங்கித் தருவதாக சுமார் ₹1,020 கோடி ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் தமிழக டிஜிபி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றம் சரமாரி கேள்வி
தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு இந்த வழக்கினை விசாரித்து, போதுமான ஆதாரம் இருக்கும் போது காலதாமதம் ஏன்?
குற்றவியல் வழக்கைப் பதிவு செய்ய அமலாக்கத்துறை ஏற்கெனவே வழக்கியுள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் போதுமானதாக இருக்கும் போது பல மாதங்கள் ஆகியும் ’விரிவான விசாரணை ’ என்ற பெயரில் கால தாமதமாக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவு
அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.
விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பே வழக்குப்பதிவு செய்வது அவசியமானது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதிமுக எக்ஸ் தளத்தில் பதிவு
இந்தநிலையில், அதிமுக தலைமை கழகம் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், “அமைச்சர் நேரு மீதான அமலாக்கத்துறை அனுப்பிய ஊழல் விவரங்கள் குறித்து வழக்கு பதியக் கோரி அதிமுக தொடர்ந்த வழக்கில், வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கட்சி நிதி பெயரில் வசூல்
03.12.2025 அன்று அமலாக்கத்துறை தமிழக “பொறுப்பு” டிஜிபி-க்கு அனுப்பிய ஆவணத் தொகுப்பில் (Dossier), பக்கம் 51-ல், “டெண்டர்களுக்கான 7.5% முதல் 10% வரையிலான கமிஷன், “Party Fund” (கட்சி நிதி) என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளது” பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி?
தனது அமைச்சரைக் காப்பாற்ற தான் வழக்கு பதியாமல் ஸ்டாலின் அரசு இருந்தது என்று நினைத்தால், தன்னையும், தன் மகனையும் காப்பாற்ற தான் இத்தனை நாட்கள் வழக்கு பதியாமல் இருந்திருக்கிறார்கள்!
“தியாகி” பாலாஜிக்காக வந்த “தொட்டுப் பார், சீண்டிப் பார்” வீடியோ, நேருவுக்கு வராமல் போனதற்கு காரணம் இது தானா?
தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டே போடலாம்
செந்தில் பாலாஜி வழக்கில் சுத்தி சுத்தி தான் குடும்பம் மாட்டும் என்றால், நேரு வழக்கில் தொட்டாலே முதலில் மாட்டுவது ஸ்டாலினும், அவர் மகனும் தான் போலயே? நகராட்சி நிர்வாகம் எனும் ஒரு துறையில் ரூ.1020 கோடி மதிப்பில் ஊழல் என்றால், இன்னும் எத்தனை துறைகள், எத்தனை ஊழல்கள், இதில் எவ்வளவு பங்கு இந்த தந்தை, மகன் கூட்டணிக்கு என கணக்கிட்டால், தமிழ்நாட்டுக்கு ஓராண்டு பட்ஜெட்டே போட்டுவிடலாம்!
மேலும் படிக்க : அமைச்சர் கே.என்.நேருவிற்கு எதிரான ஊழல் புகார் ”வழக்கு பதிவு செய்க..” : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மேலும் படிக்க : அமைச்சர் கே.என்.நேரு ”பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்ய வேண்டும்” : தவெக தலைவர் விஜய் போர்க்கொடி!
அதிமுக வந்தவுடன் முகத்திரைகள் கிழிக்கப்படும்
இன்னும் இரண்டே மாதங்கள் தான். அதிமுக ஆட்சி அமைந்ததும், எல்லா கோப்புகளும் திறக்கப்படும்! முகத்திரைகள் கிழிக்கப்படும்! இது உறுதி”! இவ்வாறு அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
====================