

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை :
AI Camera Installation in Chennai To Bengaluru National Highways : தமிழகம் மற்றும் கர்நாடகாவை இணைக்கும் முக்கியமான சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலை வழிகளில் ஏராளமான டோல்கேட்கள் எனப்படும் சுங்கச் சாவடிகள் உள்ளன. இங்கு முதலில் ஒவ்வொரு வாகனத்திற்கும் பணம் வசூலிக்கும் முறை வழக்கத்தில் இருந்தது. இதன் காரணமாக காலவிரயம் ஏற்பட்டது.
சுங்கக் கட்டணம் வசூலிப்பு
இதை தவிர்க்கும் பொருட்டு பாஸ்டேக் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்டு, அதற்கான ஸ்டிக்கர் வண்டிகளில் ஒட்டப்படுகிறது. சுங்கச்சாவடியில் உள்ள கேமரா, வண்டி எண்ணை படம்படித்து அனுப்பியவுடன், டோல்கேட் கட்டணம் தானாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக ஒரு வாகனத்தில் 30 வினாடிகள் வரை மட்டுமே ஆகிறது.
பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிப்பு
ஆனால், வார இறுதி நாட்கள், விழாக் காலங்களில் வாகன நெரிசல் அதிகமாக இருப்பதால், பாஸ்டேக் மூலம் பணம் பெறப்பட்டாலும், வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இதை தவிர்க்கும் பொருட்டு புதிய தொழில்நுட்பத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகம் செய்கிறது.
புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
சுங்கச்சாவடி கட்டண வசூலில் இது மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போகிறது. தன்மூலம் டோல்கேட் அருகே வாகனங்கள் கத்திருக்க அவசியமே இல்லாமல் போகும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) MLFF – Multi Lane Free Flow System என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, பழைய டோல்பூத் முறையை படிப்படியாக மாற்றி வருகிறது.
கேமரா டோல் முறை
இந்த புதிய முறைமையில் AI அடிப்படையிலான ANPR (தானியங்கி எண் தட்டு அங்கீகாரம்) கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இவை வாகன எண்களை தானாகப் பிடித்து, அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது FASTag கணக்கில் இருந்து கட்டணத்தை கழித்துவிடும். இந்த வாகனங்கள் டோல்பூட்டில் நிற்க வேண்டிய அவசியமே இல்லை. வாகனங்கள் 100 முதல் 120 கிமீ வேகத்திலும் சுங்கச்சாவடியை இலகுவாக கடந்து சென்று விடலாம். இதன்மூலம் பயண நேரம் குறைவதோடு, சாலைகளில் நெரிச\ல் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.
புதிய தொழில்நுட்பம் - பரிசோதனை முறை
இந்த தொழில்நுட்பம் முதற்கட்டமாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அறிமுகம் செய்யப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர் (நெமிலி), சென்னசமுத்திரம் (வேலூர் அருகே), மற்றும் பாரனூர் (ஜிஎஸ்டி பாதை) ஆகிய மூன்று இடங்களில் இந்த புதிய கேமரா முறை பரிசோதனை அடிப்படையில் தொடங்கப்படுகிறது. இதன் பயன்பாடு, கிடைக்கும் பலன்களை பொருத்து, தமிழகத்தின் மற்ற டோல்கேட்களிலும் விரிவுபடுத்தப்படும் என NHAI தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு வரப்பிரசாதம்
ஏஐ கேமிராக்கள் கொண்டு வரப்படுவதால், பயணிகளுக்கு இதனால் பல நன்மைகள் கிடைக்கும். டோல்கேட்களில் நீண்ட வரிசையில் நிற்கும் சலிப்பு இருக்காது. நேரமும் எரிபொருளும் சேமிக்கப்படும். போக்குவரத்து நெரிசல் குறைந்து, சாலை விபத்துகள் நிகழாமல் தடுக்கப்படும். சுங்கக் கட்டணம் தானாக கழிக்கப்படுவதால் பணம் கொடுத்து பரிமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
தானியங்கி கட்டண வசூல்
எனினும், பயணிகள் தங்கள் FASTag கணக்கை புதுப்பித்து, அதில் போதுமான இருப்பு வைத்திருப்பது அவசியம். இது முழுமையாக அமலுக்கு வந்தால், டோல்கேட் இல்லா பயண அனுபவம் தமிழகத்தில் நிஜமாக மாறும். சென்னை–பெங்களூரு பாதையில் இந்த புதிய முறை பயணிகளுக்கு “சீரான போக்குவரத்து – சுலபமான பயணம்” என்கிற புதிய யுகத்திற்கு அழைத்து செல்லும்.
=====