கல்வியை கடை சரக்காக மாற்றுவதா : அரசுக்கு அன்புமணி கடும் எதிர்ப்பு
தனியார் பல்கலைகள் - திமுக அரசுக்கு கண்டனம்
Anbumani Ramadoss on Self Finance College : இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக்க அனுமதிக்கும் வகையில் தனியார் பல்கலைக்கழகங்களின் சட்டத்தில் திருத்தம் செய்ய திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் கல்வியையும், சமூகநீதியையும் பாதிக்கக்கூடிய திமுக அரசின் இந்த நடவடிக்கையை பாமக கண்டிக்கிறது.
இட ஒதுக்கீட்டை ஒழித்துவிடும்
2019ம் ஆண்டின் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்வரைவை சட்டப்பேரவையில் திமுக அரசு தாக்கல் செய்திருக்கிறது. இந்த முன்வரைவு நிறைவேற்றப் பட்டால் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இதுவரை மாணவர்களுக்கு, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்த கல்வி நிறுத்தப்படும். தமிழ்நாட்டின் உயர்கல்விச் சூழலில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த சட்டத் திருத்த முன்வரைவை விவாதம் கூட நடத்தாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற திமுக அரசு திட்டமிட்டிருக்கிறது. இதை மன்னிக்கவே முடியாது.
தனியார் பல்கலைகள் - புதிய ஆபத்து
திமுக அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத் திருத்த முன்வரைவின் அடிப்படையில், தமிழ்நாட்டில் இப்போது செயல்பட்டு வரும் தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் ஆகியவற்றை அவற்றின் நிர்வாகங்கள் விரும்பினால் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றிக் கொண்டு, பல்கலைக்கழகங்களாக நிர்வகிக்க முடியும். அவ்வாறு மாற்றப்படும் போது, மருத்துவம் சார்ந்த படிப்புகளை நடத்தும் சிறுபான்மை பல்கலை.கள் 50% இடங்களையும், சிறுபான்மையினர் அல்லாத பல்கலைக்கழகங்கள் 65% இடங்களையும் மட்டும் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கினால் போதுமானது.
இட ஒதுக்கீடு அவசியமே இருக்காது
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் ஆகியவை பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் போது, அவற்றுக்கு இந்த கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. இந்த கல்வி நிறுவனங்கள் அவற்றின் விருப்பம் போல மாணவர்களை சேர்த்துக் கொள்ள முடியும். மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் கிடையாது.
அரசால் கட்டுப்படுத்தவே முடியாது
கல்விக் கட்டணம், பாடத்திட்டம் ஆகியவற்றைப் பொறுத்தவரை தனியார் பல்கலைக்கழகங்களை தமிழக அரசு எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது. அரசின் நிதி நிறுத்தப்படும் போது பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் கல்வி நிறுவனங்களில் புதிதாக சேரும் மாணவர்கள் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். தமிழ்நாடு அரசின் நிதி நிறுத்தப்படும் சூழலில் அங்கு பணியாற்றும் பேராசிரியர்களுக்கு இப்போது வழங்கப் படும் ஊதியம் வழங்கப்படாது. இவை அனைத்தும் சமூக நீதிக்கு துரோகம் இழைக்கும் செயல்கள் ஆகும்.
மேலும் படிக்க : அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை : சாட்டையை சுழற்றிய ராமதாஸ்
கட்டணக் கொள்ளைக்கு வழிவகுக்கும்
தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால், தனியார் கல்லூரிகள் அனைத்தும் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டு, கட்டணக் கொள்ளை நடத்தும் மையங்களாக மாறி விடும். அரசு வேலை வாய்ப்புகளில் குத்தகை முறை நியமனங்கள், தற்காலிக நியமனங்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்ததன் மூலம் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை திமுக அரசு ஒழித்து வருகிறது. சமூகநீதிக்கு எதிரான இந்த சட்டத் திருத்த முன்வரைவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். சட்டப்பேரவையில் இந்த சட்ட முன்வரைவை பா.ம.க. உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பார்கள்." இவ்வாறு அன்புமணி எச்சரித்துள்ளார்.
================