
நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி
Ramadoss vs Anbumani Clash Update : உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற டாக்டர் ராமதாஸ், சில நாட்கள் ஓய்வில் இருந்தார். இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் மருத்துவமனையில் இருந்த போது கட்சி, ஜாதி, மத, பேதமின்றி அனைவரும் என்னை நேரில் வந்து சந்தித்து நலம் விசாரித்தார்கள். வர முடியாத ஒரு சிலர் மட்டுமே தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்கள்.
உடல்நிலை நன்றாக இருக்கிறது
இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது. உடல் நலனில் எந்த பிரச்சனையும் இல்லை என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். நான் ஐசியூவில் இல்லை. சாதாரண சிகிச்சை பிரிவில் தான் இருந்தேன்.
பொய் பேசினார் அன்புமணி
ஒரு மணி நேரம் ஐயூசிவில் இருப்பார். அதன்பிறகு சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்படுவார். நான் மருத்துவரிடம் பேசிவிட்டேன். இன்னும் இரண்டு நாள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக அன்புமணி கூறியுள்ளார். அவர் பேசிய பேச்சுகள், தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் உலுக்கி இருக்கும்.
அனாவசியமாக பேசுகிறார் அன்புமணி
ஜயாவிற்கு ஏதாவது ஆச்சினா நான் சும்மா இருக்க மாட்டேன். தொலைச்சி விடுவேன் என அன்புமணி பேசி இருக்கிறார். யார், யாரோ வந்து பார்த்துவிட்டு போய் கொண்டிருக்கிறார்கள். இது என்ன எக்சிபிஷனா என அன்புமணி பேசி இருக்கிறார். நான் இருந்திருந்தால் ஐயாவின் பாதுகாப்பு கருதி மருத்துவமனை காரிடார் வரை யாரையும் விட்டு இருக்க மாட்டேன். ஐயாவை வைத்து நாடகம் நடத்தி கொண்டிருக்கிறார்கள் என அன்புமணி சொல்லி இருக்கிறார்.
தலைமைப் பண்பு இல்லாதவர்
படிக்காத மாடு மேய்ப்பவன் கூட இப்படி ஒரு சொல்லை சொல்லி இருக்க மாட்டான். அதற்காக தான் அவருக்கு தலைமை பண்பு இல்லை என கூறினேன். ஒரு தலைவர் என்று சொன்னால் யார் வேண்டும் என்றாலும் வரலாம். ஆறுதல் சொல்லலாம். எனக்கு எந்த தொற்று நோயும் இல்லை. நான் ஓடி, ஓடி உழைத்து வியர்வை சிந்தி இந்த கட்சியை வளர்த்தவன்.
பாமகவிற்கும் அன்புமணிக்கு தொடர்பில்லை
நான் வளர்த்த கட்சியையும், கொடியையும் வைத்து கொண்டு நான் தான் கட்சி என சொல்லி கொள்வது எந்த நியாயமும் இல்லை. தேர்தல் ஆணையம் மூலம் நாங்கள் சந்திப்போம். இப்படி எல்லாம் நடக்கும் என அன்றைக்கு எனக்கு தெரியவில்லை. பாமகவிற்கும், கொடிக்கும், அன்புமணிக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை.
தனிக்கட்சி ஆரம்பியுங்க அன்புமணி
பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்கள். ஒழுங்கு நடவடிக்கை குழுவால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இவர் என்னை பற்றி பேச கூடாது. வேண்டுமென்றால் நீ தனிக்கட்சி ஆரம்பித்து கொள் என்று ஏற்கனவே நான் சொல்லி விட்டேன். என்னுடைய வளர்ப்பு சரியாக இருந்தது என நிருபிக்க வேண்டும் என்றால் நீ தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து கொள்ள வேண்டும். அது தான் உனக்கு நல்லது.
அன்புமணிக்கு இறுதி எச்சரிக்கை
6, 8 மாதங்களாக நடந்து வரும் சண்டையில் 3 முறை தனி கட்சி ஆரம்பித்து கொள் என சொல்லி இருக்கிறேன். இனிமேல் என் பெயரையோ, கட்சியின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்த கூடாது. என்னுடைய இனிஷியலை வேண்டும் என்றால் பயன்படுத்தி கொள்ளட்டும்.
மேலும் படிக்க : PMK Ramadoss vs Anbumani : யார் கை ஓங்கும்? சோர்வடையும் தொண்டர்கள்
தமிழகத்தை அன்புமணி காப்பாற்ற மாட்டார்
தனி மனிதனால் 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று 46 வருடம் அலைந்து திரிந்து உருவாக்கிய கட்சியை இப்போது என் கட்சி என சொல்லி கொள்வது என்ன நியாயம். கட்சியின் சட்டமன்ற தலைவர், கொறடா பதவிகளில் இருந்து யாரும் நீக்க முடியாது. அது சபாநாயகருக்கு தான் அதிகாரம் உள்ளது. தந்தை, தாயை காப்பாற்ற முடியாத அன்புமணி எப்படி தமிழகத்தை காப்பாற்ற போகிறார்,” இவ்வாறு ராமதாஸ் பதிலளித்தார்.
=================