
ரூ.1,000 கோடிக்கு கனிம வள கொள்ளை
Anbumani Ramadoss on Mineral Theft : இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட குவாரிகளில் மட்டும் ரூ. 1000 கோடிக்கும் கூடுதலாக கனிமவளக் கொள்ளை நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி, கனிமவளக் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவற்றைத் தடுக்கவும், அதில் சம்பந்தப்பட்ட கனிமவளக் கொள்ளையர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும், கனிமக் கொள்ளையர்களை பாதுகாத்து வருவதும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
தென் மாவட்டங்களில் இயற்கையின் நன்கொடை
தென்மாவட்டங்களுக்கு இயற்கைக் கொடுத்தக் கொடை மேற்குத் தொடர்ச்சி மலைகளும், அதையொட்டிய மலைக்குன்றுகளும் ஆகும். சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் நேரடித் தொடர்பு கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைகள், அதையொட்டிய பகுதிகளில் கல் குவாரிகள் அமைக்கப்பட்டு கனிமவளம் கொள்ளையடிக்கப்படுகிறது. தமிழகத்தில் வேறு எந்த பகுதிகளிலும் இல்லாத வகையில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தான் மிக அதிக எண்ணிக்கையில் உரிமம் பெற்ற குவாரிகளும், சட்டவிரோத குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன.
கேரளாவுக்கு செல்லும் கல், மணல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியில் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை முடித்துக் கொண்டு விமானம் ஏறுவதற்காக திருவனந்தபுரம் நோக்கி மகிழுந்தில் நான் சென்று கொண்டிருந்த போது, எதிர்திசையில் சாரை சாரையாக பெரிய சரக்குந்துகள் வந்து கொண்டிருந்ததை பார்த்தேன். அவை எங்கு செல்கின்றன என்று விசாரித்த போது, தென் மாவட்டங்களில் உள்ள சட்டப்படியான கல் குவாரிகளிலிருந்து அளவுக்கு அதிகமாகவும், சட்டவிரோத கல் குவாரிகளில் இருந்து திருட்டுத்தனமாகவும் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, இந்த சரக்குந்துகள் மூலமாக கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப் படுவதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலை காணாமல் போகும்
இது தொடர்ந்தால், தென் மாவட்டங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியே காணாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது என்பது தான் உண்மையாகும். மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் பட்டவர்த்தனமாக கொள்ளையடிக்கப்படும் நிலையில், அதனால், சுற்றுச்சூழலுக்கு ஈடு செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
கனிம வள கொள்ளை - வேடிக்கை பார்க்கும் அரசு
அதை தடுக்க வேண்டிய அரசு, அதற்கு பதிலாக கனிமவளக் கொள்ளையை ஊக்குவித்து வருகிறது. கனிமவளக் கொள்ளையில் ஈடுபடுவர்கள் திமுக மற்றும் அதன் அனுதாபிகள் என்பது தான் இதற்குக் காரணம் ஆகும். தென் மாவட்டங்களில் நடைபெறும் கனிமவளக் கொள்ளைகளின் காட்பாதராகத் திகழ்பவர் ஆளுங்கட்சியின் பெரும்புள்ளி ஒருவரும், அவரது குடும்பத்தினரும் என்று கூறப்படுகிறது. றது.
நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 53 குவாரிகளிலும் சேர்த்து நடந்த கொள்ளையின் மதிப்பு ரூ.600 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களையும் சேர்த்தால் கனிமவளக் கொள்ளையின் மதிப்பு ரூ.1000 கோடிக்கும் கூடுதலாக இருக்கக் கூடும். இதை தடுத்து நிறுத்தா விட்டால் மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் காக்க முடியாது.
மேலும் படிக்க : ’மழையால் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு’ : அன்புமணி வலியுறுத்தல்
வேலியே பயிரை மேய்வதா?
இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய திமுக அரசு கனிமவளக் கொள்ளையர்களுக்கு துணை போவதை இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது; வேலியே பயிரை மேய்வதை வேடிக்கைப் பார்க்க முடியாது. எனவே, தென்மாவட்டங்களில் நடந்த கனிமவளக் கொள்ளை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இதற்காக தென் மாவட்ட மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நானே தலைமையேற்று நடத்துவேன் என்று” அன்புமணி தெரிவித்துள்ளார்.
================