
தமிழக காவல்துறை டிஜிபி :
Annamalai Condemns DMK on DGP Appointment : தமிழக காவல்துறை டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபி சீமா அகர்வால், ஆவின் விஜிலென்ஸ் முதன்மை அதிகாரி டிஜிபி ராஜிவ் குமார், போலீஸ் அகாடமி இயக்குனர் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோட் உட்பட, 11 அதிகாரிகளின் பெயர்கள் டிஜிபி பட்டியலில் இடம் பெற்றிருந்தன. இவர்களில் ஒருவர் டி.ஜி.பி., யாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் :
ஆனால், பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமனை(DGP G Venkataraman IPS) தமிழக அரசு நியமித்தது. இதையடுத்து அவர், 33வது டிஜிபியாக நேற்று பொறுப்பேற்றார். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன், ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று, 1994ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். பெரம்பலுார், சேலம், மதுரை, மத்திய புலனாய்வு பிரிவுகளில் முன்பு பணியாற்றியவர். அவருக்கு மூத்த அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பதவியேற்பு - டிஜிபிக்கள் புறக்கணிப்பு :
டிஜிபி தேர்வு பட்டியலில்(DGP Selection List) இடம் பெற்றிருந்த, டிஜிபி அந்தஸ்து அதிகாரிகள் எட்டு பேர் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் வெங்கட்ராமன் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தமிழக காவல்துறையில் இது பேசு பொருளாகி இருக்கிறது.
பொறுப்பற்ற திமுக அரசு :
இந்தநிலையில், கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “ முதல்வர் ஸ்டாலின் 2026-ம் ஆண்டு ஓய்வுபெறப் போகிறார். அதனால் பிரிவுபச்சார விழாவாக ஜெர்மனி, லண்டனுக்கு சென்றுள்ளார். ஆட்சிக்கு வந்தால் இந்து கோயில்களை புனரமைக்க ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும் என்றனர். நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 155 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டிஜிபி விவகாரத்தில் திமுக அரசியல் :
தமிழகத்தில் பொறுப்பு டிஜிபி-யாக ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். சங்கர் ஜிவால் பணி ஓய்வு பெற்ற நிலையில் 6 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். அவர்களில் முதல் மூவரில் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.
மேலும் படிக்க : தமிழ்நாடு தீயணைப்பு ஆணையத் தலைவர் : டிஜிபி சங்கர் ஜிவால் நியமனம்
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டும் கூட, டிஜிபியாக ஒருவரை நியமிக்கவில்லை. 9வது இடத்தில் உள்ள ஒருவரை பொறுப்பு டிஜிபியாக நியமித்துள்ளனர். டிஜிபி விவகாரத்தில் திமுக அரசு பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் சென்னை 21வது இடத்தில் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது”. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
=====