
துணை ஜனாதிபதி - சி.பி. ராதாகிருஷ்ணன் :
Nainar Nagendran To CM MK Stalin : புதிதாக துணை ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக(CP Radhakrishnan) அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
தமிழரான இவரை தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி சிவா, வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் :
இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்(Nainar Nagendran Tweet) தனது எக்ஸ் தள பக்கத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்து இருக்கிறார்.
”நமது பாரதத்தின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தரும், மாண்புமிகு மகாராஷ்டிரா ஆளுநருமான அண்ணன் சி.பி. ராதாகிருஷ்ணன்(CP Radhakrishnan Vice President) அவர்களுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இண்டி கூட்டணியிலும் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு அளிக்க வேண்டும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.
தமிழகத்திற்கு முக்கிய அங்கீகாரம் :
தென் பாரதத்தில் இருந்து ஒரு பெருமைமிகு தமிழரை, மூத்த தலைவரை, துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது தமிழகத்திற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம் ஆகும். இத்தருணத்தில் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன். 2022-இல் நமது மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த போது, ஒடிசா மண்ணின் மகளான அவரை முன்னாள் ஒடிசா முதல்வர் திரு. நவீன் பட்நாயக் அவர்கள் கட்சி வித்தியாசங்களையும், அரசியல் மாறுபாடுகளை தாண்டி தனது கட்சியினரை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். பட்நாயக் அவர்களுக்கு அன்றிருந்த பெருந்தன்மையும், மாநிலப் பற்றும் திமுகவிற்கும், அதன் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் அவர்களுக்கும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
மேலும் படிக்க : VP Election : சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரியுங்க : எடப்பாடி வேண்டுகோள்
முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை :
ஆகவே, நமது தமிழ் மண்ணின் மைந்தரான அண்ணன் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தனது முழு ஆதரவையும் நல்குமாறு மாண்புமிகு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
===========