
சென்னையில் மெட்ரோ ரயில் :
Chennai Airport To Kilambakkam Metro Plan in Tamil : சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் விமான நிலையம் - விம்கோ நகர், சென்டிரல் - பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் நாள்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் பயணித்து வருகின்றனர்.
2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் :
இந்தநிலையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் முழு வீச்சில் நடந்து வருகிறது. சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம்(Chennai Airport To Kilambakkam Bus Terminus Metro) அமைந்து இருப்பதால், இங்கு செல்ல பேருந்து மற்றும் மின்சார ரயில் சேவை உள்ளது. இருப்பினும் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டித்தால், தங்கள் பயணத்திற்கு வசதியாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ :
எனவே, விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பு செய்ய சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு(Airport To Kilambakkam Metro Plan) செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது. இந்த நிலையில், விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையில் 15.46 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல்கட்ட பணிகளை தொடங்கும் வகையில், தமிழக அரசு ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை மக்களுக்கு வரப்பிரசாதம் :
இந்த திட்டம் அமலுக்கு வந்தால், பொதுமக்கள் சென்னைக்குள் எங்கு வேண்டும் என்றாலும் எளிதாக சென்று வர முடியும். விரைவான போக்குவரத்து வசதி அவர்களுக்கு கிடைத்து விடும். நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட ஆரம்ப கட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, நிலம் கையகப்படுத்துதலுக்கு ரூ.1,816 கோடியும், மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான புவியியல் ஆய்வு, நிலத்தடி ஆய்வு ஆகிய பணிகளுக்கு ரூ.112.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
2029ல் அமலுக்கு வரும் திட்டம் :
திட்டமிட்டபடி பணிகள் தொடங்கினால் 4 ஆண்டுகளில் அதாவது 2029ல் விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில்(Airport Between Kilambakkam Metro Train) ஓடத் தொடங்கி விடும். பெரிய அளவில் நிலம் கையகப்படுத்துதல் சிக்கல் வரவாய்ப்பு இல்லை என்பதால் பணிகள் எளிதாக தொடங்கி விடும் என்கின்றனர் அதிகாரிகள். மெட்ரோ பணிகள் தொடங்கினால் பல்லாவரம் முதல் கிளாம்பாக்கம் வரை நெரிசல் அதிகமாக இருக்கும். தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகள் நெரிசலில் சிக்கித் தவிக்கும்.
மேலும் படிக்க : ரயில் பாதையில் " Solar Panels" : இந்திய ரயில்வே புதிய சாதனை
எனவே, தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து நிறைவேற்றினால், ஓரளவு போக்குவரத்தை நெரிசலை சமாளிக்க முடியும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தாம்பரத்தை தவிர்த்து மாற்று வழி என்பது, நல்ல தீர்வாக அமையும்.
====================