
பெருகிப் பாயும் காவிரி :
Cauvery Water Issue : தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை வளம் கொழிக்கச் செய்யும் மேட்டூர் அணை, உரிய காலத்தில் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டு, குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. சுமார் ஒரு லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டதால், காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
முழுவீச்சில் குறுவை சாகுபடி :
இந்த ஆண்டு 4வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதால், வரும் நீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்படுகிறது. தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதால், டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கடைமடையான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடந்து வருகிறது. காவிரி நீரை மட்டுமே நம்பி விவசாயிகள் இந்த சாகுபடியில் இறங்கியுள்ளனர்.
கடைமடைகளில் ஒருபோக சாகுபடி :
கடந்த காலங்களில் காவிரி நீர் உரிய நேரத்திற்கு வராததால், முப்போக சாகுபடி இப்போது ஒருபோக சாகுபடி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு நீர்நிலைகளை மேம்படுத்தாததாலும், மழைக்காலங்களில் கூடுதல் நீரை சேமிக்க முறையாக வழி வகை செய்யாததாலும், ஒவ்வொரு ஆண்டும் தண்ணீருக்காக விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஆறுகள், வாய்க்கால்களை துார்வார பல கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கினாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும், முறைகேடுகளாலும் அப்பணிகளை முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. இந்த ஆண்டும் இந்த அவலம் தொடர்வதுதான் வேதனை.
வீணாக கடலில் கலக்கும் காவிரி :
இப்படிப்பட பிரச்சினைகளால் காவிரியில் உரிய நீர் இருந்தாலும், கடைமடை பகுதிகளுக்கு முழுமையாக நீர் சென்றுது சேர்வதில்லை. ஆறு, வாய்க்கால்கள் முழுமையாக தூர் வாரப்படாததால், நிலங்களுக்கு வர வேண்டிய தண்ணீர் வேறு வழியின்றி வீணாக கடலில் கலக்கிறது. வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிநீர் திறக்கப்பட்ட போது தினமும், 10 டிஎம்சி நீர் கடலில் கலந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கருகும் குறுவை பயிர்கள் :
கீழ்வேளூர் பகுதியில் ஓடம்போக்கி ஆறு, வெள்ளையாறுகளில் எதிர்பார்த்த தண்ணீர் திறக்கப்படவில்லை. இதேபோல் வேதாரண்யம் முள்ளிவாய்க்காலில் வெங்காயத்தாமரையால் தண்ணீர் வருவதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதி சுற்று வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர் காய்ந்து கருகும் நிலை உள்ளது.
ஒப்புக்கு நடைபெற்ற தூர்வாரும் பணிகள் :
திருவாரூர் மாவட்டத்தில் பாமணி, கோரையாறு, வெள்ளையாறு, அடப்பாறு, அரிச்சந்திரா நதி, பாண்டவையாறு உள்ளிட்டவற்றில் தண்ணீர் கூடுதலாக திறந்து விடப்பட்டுள்ளது. ஆனாலும், வாய்க்கால்களை முறையாக துார்வாராமல் ஒப்புக்கு துடைத்தெடுத்து போனதால், தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை என்கின்றனர் விவசாயிகள். பெரிய ஆறுகளில் தண்ணீர் சென்றாலும், வாய்க்கால்கள் காய்ந்து போய் கிடக்கின்றன.
அதிகாரிகளின் மெத்தனப்போக்கு :
காவிரியில் வெள்ளம் பாய்வதால், தூர்வார முடியவில்லை என்று வழக்கம் போல அதிகாரிகள் சாக்குபோக்கு சொல்கின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு தூர்வாரி இருந்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என்பதுதான் யதார்த்த உண்மை. சில இடங்களில் வாய்க்கால்கள் பாதிவரை தூர்வாரப்பட்டு கிடக்கின்றன. உரிய நிதி வரவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். விவசாயிகள் நலனை அக்கறை செலுத்துவதாக கூறும் திமுக அரசு, பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வேலை பார்க்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து, சாகுபடி பணிகள் தங்கு தடையின்றி நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே டெல்டா விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
============