
K S Alagiri on TN Police : காங்கிரஸ் பிரமுகர் அப்ரோஸ், மாநகர காவல் ஆணையருக்கு கருப்புக்கொடி காட்டியதாக கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.வேப்பேரியில் உள்ள அப்ரோஸின் இல்லத்துக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னை மாநகர காவல்துறைக்கு சிந்திக்கும் திறன் இல்லை. தமிழக காங்கிரசுக்கு எதிராக காவல்துறை கெடுதல் செய்திருக்கிறது. அப்ரோஸ் கருப்புக் கொடி(Black Flag Protest) காட்டி இருந்தாலும் தவறில்லை.
மேலும் படிக்க : விவசாயிகள் வயிற்றில் அடிப்பது நல்லாட்சியா?: திமுக அரசுக்கு கேள்வி
நாட்டின் பிரதமருக்கு, குடியரசுத் தலைவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுகிறோம். அவர்களெல்லாம் சிரித்துக் கொண்டே கடந்து செல்கின்றனர். காவல்துறை ஆணையருக்கு கருப்புக் கொடி காட்டினால் அவ்வளவு பெரிய குற்றமா? ஜனநாயக நாட்டில் அதற்கு இடம் இல்லையா? தமிழகத்தில் ஜனநாயகம் இருக்கிறதா?
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அனைத்தையும் அனுசரித்து செல்கிறார். எல்லாவற்றையும் சரிவர செய்து வருகிறார். அவருடைய ஆட்சியில் காவல்துறை இப்படி செய்கிறார்கள் என்றால் இது எவ்வளவு பெரிய சர்வாதிகாரம். மாநகர காவல் ஆணையர் மனிதரா அல்லது கடவுளா? இல்லை, அதற்கும் மேலா? ஆணையர் வரும்போது கருப்புக் கொடி காட்டக் கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. இதுகுறித்து எங்கள் தலைவர்களுடன் கலந்து பேசி முதல்வரை சந்திக்க இருக்கிறோம்.
இவ்வாறு கே.எஸ். அழகிரி(K. S. Alagiri) தெரிவித்தார்.