

திமுக - காங்கிரஸ் மோதல்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆட்சியில் பங்கு என்ற கோஷம் காங்கிரசில் வேகமாக எதிரொலிக்கிறது. இது திமுக கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
கூட்டணி ஆட்சி ஒத்து வராது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்த பிறகும், மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி தங்கள் விமர்சனங்களை பொதுவெளியில் வைத்து வருகிறார்கள்.
இதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு உள்ளது. ஆட்சியில் பங்கு தேவை என்றால், தவெக கூட்டணிக்கு காங்கிரஸ் செல்ல வேண்டும்.
திமுக தலைவர்களும் கொந்தளிப்பில் இருப்பதால், கூட்டணி விரிசல் அதிகமாகும் எனத் தெரிகிறது.
தமிழக காங்கிரஸ் பாதயாத்திரை
இந்தநிலையில், தமிழகம் வந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் சென்னை முகப்பேரில் நடைபெற்ற பாதயாத்திரையில் கலந்து கொண்டார்.
மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”விவசாயிகளுக்கு எதிரான போக் மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.
இந்தியா அமெரிக்கா இடையே போடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தால் அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவுக்குள் ஊடுருவும்.
இதனால் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
அமெரிக்காவிடம் இந்தியா சரண்
ஏற்கெனவே ஜவுளித் தொழில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவையே அமெரிக்காவிடம் மத்திய அரசு சரணடையச் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா பற்றி தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்திய அரசு மவுனம்
ஆனால் இந்திய அரசோ மவுனம் காத்து வருகிறது. நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் பேச முடியாத சூழல் உள்ளது. மக்கள் பிரதிநிதிகளின் உரை அவை குறிப்பில் நீக்கப்படுகின்றன.
திமுக-காங்கிரஸ் உறவு பலமானது
திமுக- காங்கிரஸ் இடையேயான உறவு என்பது மிக நீண்ட கால மற்றும் கொள்கைரீதியான கூட்டணி. பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை எதிர்த்து நாங்கள் இணைந்து போராடி வருகிறோம்.
காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது
அந்த ஒற்றுமை இப்போதும் தொடர்கிறது. தேர்தல் நெருங்கும் வேளையில், எங்களுக்கும் எங்களுடைய கூட்டணிக் கட்சிகளுக்கும் தெளிவான இலக்குகள் உள்ளன.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
கூட்டணி ஆட்சி - தனிநபர் கருத்து தான்
கூட்டணி ஆட்சி குறித்து கட்சியில் இருக்கும் தனிநபர்கள் யாராவது கருத்துச் சொன்னால், அது அவர்களின் சொந்தக் கருத்துக்களே தவிர, அதற்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
கட்சி தலைமையே இறுதி முடிவு
கூட்டணி மற்றும் அதன் முடிவுகள் குறித்து அகில இந்தியத் தலைமை மட்டுமே இறுதி முடிவெடுக்கும். இவ்வாறு கூறினார்.
முன்னதாக நடந்த மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில், ‘கூட்டணிக் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது. மீறி பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரசுக்கு திமுக நிபந்தனை
சர்ச்சைக்குரிய வகையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முன்வருவோம் என்று திமுக தரப்பில் கூறப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
மேலும் படிக்க : “அச்சம் இல்லை, அச்சமென்பது இல்லையே” : மாணிக்கம் தாகூர் பதிவு
தமிழக காங்கிரசில் பரபரப்பு
மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தால், தமிழக காங்கிரசுக்குள் பிளவு ஏற்படும். தேர்தல் நேரத்தில் இப்படி நடந்தால், அது வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
==========